குழந்தைக் கடத்தல் வழக்கு! மதுரைக் காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

மதுரையைச் சேர்ந்த வானவராயன், என்பவர் நரிக்குறவர் காலனியில் வசித்துவருகிறார். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுக்கு
3 வயதில் பவித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிவகாமி  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகேயுள்ள நடைபாதையில் கருகமணி , ஊசி ,பாசி உள்ளிட்ட பொருள்களை வியாபாரம் செய்து வந்தார். தினமும் இவர் வியாபாரத்தின்போது குழந்தை பவித்ராவையும் அழைத்துச் செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த மே மாதம் 19-ம் தேதி சிவகாமி வியாபாரத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தபோது குழந்தை பவித்ராவை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டார். இதுகுறித்து சிவகாமி மதிச்சியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அதே சமயம் கடத்தப்பட்ட குழந்தையைக் கண்டுபிடித்து தரவேண்டி சிவகாமி சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து 5 மாதங்கள் கழித்து கடத்தப்பட்ட மூன்று வயது குழந்தையைக் காவல்துறையினர் தென்காசியில் மீட்டனர். தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், இன்று நீதிபதிகள்  சுப்பையா, ஜெகதீஸ் சந்திரா முன்பு, மீட்கப்பட்ட குழந்தை பவித்ராவை ஆட்கொணர்வு மனுவை முடித்து வைக்கும் நோக்கில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் கூறுகையில், இந்தக் குழந்தைக் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் மற்றும் அவர்களின் பின்னணி குறித்தும் விரிவான விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள், குழந்தை பவித்ரா கடத்தப்பட்டது தொடர்பான ஆட்கொணர்வு மனு குறித்து விரிவான பதில் மனுவை மதுரை மாநகர் காவல் ஆணையர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை வருகிற 27-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!