ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டெங்கு நிலவரம் என்ன..? நேரடி ரிப்போர்ட் #LetsFightDengue

dengue, டெங்கு

லைநகர் சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விசிட் செய்தோம். டெங்குக் காய்ச்சல் பாதிப்புகள், மருத்துவமனையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், டெங்கு பாதிப்புகளிலிருந்து தப்பிக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்?, என்பது குறித்து நம்மிடம் பேசினார் மருத்துவர் நாராயண பாபு.

"தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் சூழலில் இங்குள்ள நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?"

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரத்யேகமாக நான்கு வார்டுகளும், அதில் மொத்தம் 300 படுக்கை வசதிகளும் உள்ளன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 2950 நபர்கள் காய்ச்சலோடு வந்தனர், அவர்களில் 495 பேர் டெங்குக் காய்ச்சல் அறிகுறிகளோடு இருந்தனர். கடந்த 11-ம் தேதி மட்டும் மொத்தம் 295 நோயாளிகள் வந்தனர், அவர்களில் 45 பேர் டெங்குக் காய்ச்சல் அறிகுறிகளோடு உள்ளனர். குறிப்பாக டெங்கு ரத்தப் பரிசோதனைக்காக மூன்று “செல் கவுன்ட்டர்களை” அரசு  கொடுத்துள்ளது, 24 மணிநேரமும் ரத்தப்பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும், 8 வார்டுகள் தீவிர சிகிச்சை பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கூட்டம் வந்தாலும் அவர்களைப் பார்த்துக்கொள்ள வார்டுகள், மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவில் உள்ளனர். டெங்குக் காய்ச்சலுக்கு வழிவகுக்கும் ஏடிஸ் கொசுவானது பகலில் கடிக்கக் கூடியது (Day biters). சுத்தமான தண்ணீரில் இனப்பெருக்கம் செய்து பெருகுகிறது. ஆகவே, அனைவரும் வீட்டிலும் ,வீட்டை சுற்றியும்  நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .

dengue, டெங்கு

"இதுதவிர வேறு என்னமாதிரியான விழிப்புஉணர்வு நடவடிக்கைகளை மக்கள் எடுக்க வேண்டும்?"      

டெங்கு நோயை ஒழிப்பதற்கு முதலில் டெங்கு கொசுவை ஒழிக்க வேண்டும். இந்த நோயை எதிர்ப்பது என்பது ஒவ்வொரு தனிநபரின் கடமையாகும். ஒருவர் காய்ச்சல் அறிகுறிகளோடு தென்பட்டால் வெளியே நேரத்தை வீணாக்காமல், தானாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் தொடக்கத்திலேயே அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். குறிப்பாக, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகளோடு, சிறந்த சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்போது நோயானது முற்றிலும் குணப்படுத்தப்படுகிறது. எனவே, நோயாளிகள் நேரத்தைக் கடத்தாமல் காய்ச்சலுக்காக 24 மணிநேரம் செயல்படும் புறநோயாளிகள் பிரிவில் வரலாம். இங்கு சீட்டு வாங்கி வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை, நேரடியாக வார்டில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

"எந்த மாதிரியான நிலையில் (Case )டெங்கு இறப்பு அதிகமாக ஏற்படுகிறது?"

டெங்குவில் பொதுவாக இரண்டு வகை உள்ளது. ஒன்று ,டெங்கு குருதிப் போக்குக் காய்ச்சல், அதாவது ரத்த அணுக்கள் குறைந்து 10 ஆயிரத்துக்கும் கீழாக வரும்போது எந்த நேரத்திலும் குருதிப் போக்கு (Haemorrhage) ஏற்படும். இரண்டாவது, டெங்கு அதிர்ச்சி நோய் (Dengue shock syndrome) பெரும்பாலும் இவ்வகை டெங்கு பாதிப்பே அதிகம். டெங்குக் குருதிக் காய்ச்சல் அறிகுறிகளோடு வந்தால், ரத்தம் வழங்கப்படும்போது சரியாகிவிடும். ஆனால், Shock syndrome, அறிகுறிகளே இல்லாமல் அமைதியாகத் தாக்குகிறது. நோயாளிகள், உறுப்புகள் செயலிழந்த நிலையில் (குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல்) வருகின்றனர். முன்கூட்டியே வரும்போது சிறந்த சிகிச்சை அவர்களுக்கு அளிக்கப்பட்டு 100% முற்றிலும் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

"நிலவேம்பு எவ்வளவு நாள் எடுத்துக்கொள்ள வேண்டும்?"

டெங்குக் காய்ச்சல் ஒரு வைரஸ் நோய். நிலவேம்பு கஷாயத்தில் நில வேர், சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி போன்ற வைரஸ் எதிர்ப்பு பண்புகள் அதிகம் காணப்படுகிறது (Anti- viral). இது டெங்குக் காய்ச்சலை எதிர்த்துச் சிறப்பாக செயலாற்றும். அதேபோன்று பப்பாளி இலைச் சாறு பருகும்போது அனைத்து ரத்தத் கூறுகளும் அதிகரிக்க உதவி செய்கிறது. வைரஸை அழிப்பதற்கென்று மாத்திரைகள் எதுவும் கிடையாது.  நாங்கள் கொடுப்பதெல்லாம் வெறும் Supportive and supplimentry சிகிச்சைதான். பாதிக்கப்பட்டவர் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்; கஞ்சி, மோர், பழச்சாறுகள், ORS(oral rehydration solution)  என எந்த வடிவிலும் நீரை எடுத்துக்கொள்ளலாம்.

dengue, டெங்கு

"டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடக்கத்திலேயே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்களா?"      

25% மக்கள் நேரடியாக அரசு மருத்துவனைக்கு வருகின்றனர். 75% மக்கள் மற்ற மருத்துவமனைகளின் பரிந்துரைகளால் இங்கு வருகின்றனர். வெவ்வேறு வகையான நோய் நிலைகளில் உள்ளவர்கள், அதாவது நோயின் தாக்கம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக இங்கு வந்தடைகின்றனர். WHO நெறிமுறைகளின்படி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்கள் மருத்துவமனைகளில் உள்ள குழுவானது மற்ற மருத்துவமனைகளுக்குச் சென்று டெங்குவைப் பற்றிய சிறப்பு முகாம் நடத்தி வருகிறது .

"இந்த நோயின் தாக்கம் எப்பொழுது குறையும்?"

பொதுவாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழையானது குறைந்த அளவில் பெய்து ஆங்காங்கே நீர் திட்டு திட்டாய் காணப்படுவதால் கொசுவின் உற்பத்தி அதிகரிக்கிறது. எப்போது அதிகப்படியான மழை வருகிறதோ அப்போது நோயின் தாக்கம் குறைந்து விடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!