டெங்குக் கொசுவை ஒழிக்க குளத்தில் மீனை விட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்! | Minister Vijaya baskar’s new plan to ersdicate dengue mosquitoes

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (20/10/2017)

கடைசி தொடர்பு:08:50 (21/10/2017)

டெங்குக் கொசுவை ஒழிக்க குளத்தில் மீனை விட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!

திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள சர்க்கரைக் குளத்தில் டெங்குக் கொசுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்களை விட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புக்குக் காரணமான டெங்குக் கொசுவை அழிக்கும் நடவடிக்கையில் தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் டெங்குக் காய்ச்சலைத் தடுக்கும்  நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தினார். பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை நேரில் சென்று பார்வையிட்டு, மருத்துவக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து, மாவட்டத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் தேரடி வீதி, சர்க்கரை குளம் அருகில் காய்ச்சல் மருத்துவ முகாமை அமைச்சர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினார். பின்னர் திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளுக்கும் மிதிவண்டிகள் மூலம் வீடுவீடாக நிலவேம்புக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள சர்க்கரைக் குளத்தில் டெங்குக் கொசுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்களை விட்டார். அப்போது, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்எல்ஏ-க்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.