பட்டியல் இன இளைஞர்மீது தாக்குதலுக்கு சி.பி.ஐ.எம் கண்டனம்

ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வசந்த்தை செருப்பால் அடித்ததுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவகங்கையில் வசித்துவரும் வசந்த், சொந்த ஊரான மேலப்பிடாவூர் கிராமத்தில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு தீபாவளிப் பண்டிகைக்காகச் சென்றிருக்கிறார். மானாமதுரை சிப்காட்டிலிருந்து தனது சித்தப்பா மகன்களுடன் டூவிலரில் சென்றவரை ஊருக்குள் நுழையும் இடத்தில் அதே ஊரைச் சேர்ந்த பாலா, இளங்கோ இருவரும் வசந்த்தை சாதியின் பெயரைச் சொல்லி செருப்பால் அடித்திருக்கிறார்கள். அதோடு இல்லாமல் வாளால் மிரட்டியிருக்கிறார்கள். உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். உடல் முழுவதும் ஊமைக் காயங்கள், காதில் ரத்த காயம். வசந்த் பையில் வைத்திருந்த ரூபாயை எடுத்துள்ளனர். பைக் ஆர்சி புக், லைசென்ஸ் உள்ளிட்ட வசந்த் உடைமைகளைப் பிடிங்கியுள்ளனர்.

எதிர்பாராதத் தாக்குதலிலிருந்து நிலைகுலைந்த நிலையில் தடுமாறி எழுந்திருப்பதற்குள் அவர்கள் ஓடிவிட்டார்கள். இத்தகைய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். வசந்த் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சக்திகள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தாக்கியவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என சி.பி.ஐ.(எம்) கண்டனம் தெரிவித்தது. தாக்குதலால் பாதிக்கப்பட்ட வசந்த்துக்கு ரத்த காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் இருக்கும் வசந்த்திடம் பேசினோம், "என் சித்தப்பா வீடு இருக்கும் மேலப்பிடாவூர் கிராமத்துக்குச் செல்லும் வழியில் பாலா, இளங்கோ போன்றவர்கள் வழிமறித்தார்கள். நான் டூவீலரை நிறுத்தியதும் தாக்குதல் நடத்தினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் கையில் வைத்திருந்த வாளை எடுத்ததும் மண்ணை அள்ளி தூவிவிட்டு ஓடிவந்துவிட்டேன். ஊரில் நடந்ததைச் சொன்னேன். அவனுக்காக நாங்கள் யாரும் வர மாட்டோம் நீ போய் போலீஸில் புகார் கொடு என்று சொன்னார்கள். என் காதில் ரத்தம் வடிய ஆரம்பித்ததும் பயந்து போய் ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டேன். போலீஸ் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்கிறது. தாக்கியவர்களைக் கைதுசெய்யாமலும் இருக்கிறார்கள்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!