வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (20/10/2017)

கடைசி தொடர்பு:07:29 (21/10/2017)

எம்.எல்.ஏ-வுக்கு எதிராகக் கொந்தளித்த விவசாயி நெஞ்சுவலியால் மரணம்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே அம்மா திட்ட முகாமில் எம்.எல்.ஏ-வுக்கு எதிராகக் கொந்தளித்த விவசாயி நெஞ்சுவலியால் இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

விவசாயி மரணம்

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ளது மேட்டுப்பாளையம் ஊராட்சி. அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்துகொண்டனர். அப்போது, “கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. கொசு மருந்து தெளிப்பதில்லை. கால்வாய் சுத்தம் செய்வது கிடையாது. பேருந்து வசதி இல்லை. உடைந்த ஏரியை இரண்டு வருடமாக சீரமைக்கவில்லை.“ எனப் பொதுமக்கள் சரமாரியாகப் புகார் எழுப்பினர். அப்போது சடகோபன் என்பவர், “நான் ஒரு விவசாயி. விவசாயம் செய்வதற்காக அருகிலுள்ள மாத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் கடன் கேட்டால் கொடுப்பதில்லை. தொடர்ந்து அலைகழிக்க வைக்கிறார்கள். கடனைச் செலுத்திவிட்டு மீண்டும் கடன் கேட்பவர்களுக்குகூட கடன் அளிப்பதில்லை. இப்படியே போனால் மிச்சமிருக்கும் விவசாயமும் அழிந்து போகும்.” என எம்.எல்.ஏ பழனியை நோக்கி சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். உடன் இருந்தவர்கள் சடகோபனை சமாதானப்படுத்தி அமர வைத்தனர். மனம் நொந்த நிலையில், அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. நெஞ்சுவலியால் துடித்த சடகோபனை அருகில் இருந்தவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தார்கள்.   

சடகோபனின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதும் எம்.எல்.ஏ பழனியும், வருவாய்த்துறையினரும் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க