ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நகைகள் கணக்கிடும் பணி தொடக்கம்

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நகைகள் குறித்த கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 
உலக பிரசித்திபெற்ற மூன்றாம் பிராகாரத்தைக் கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 400 ஆண்டுகளுக்கும் முந்தைய பெருமை கொண்டது. இக்கோயிலுக்குச் சேதுபதி மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், நேபாள மன்னர்கள் தங்க, வைர நகைகளைக் கணக்கின்றி வழங்கியுள்ளனர். கோயிலில் உள்ள கருவூலத்தில் இந்த நகைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருவதுடன், விழாக்காலங்களின்போது சுவாமி, அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நகைகள் கணக்கெடுப்பு

 இந்நிலையில், ராமநாதசுவாமி கோயிலுக்கு முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னர்களால் வழங்கப்பட்ட நகைகளில் ரத்னப் பதக்கம், வைர அட்டியல், சிவப்புக்கல் அட்டியல், ரத்தினப் புல்லாக்கு, ரத்தினங்கள் இளைத்த திருமாங்கல்யம், வைரச் சுட்டிப் பதக்கம், தங்க மணி உள்ளிட்ட நகைகளின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை எனவும், இந்த நகைகளின் நிலை பற்றி அறிய உத்தரவிட வேண்டும் எனவும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பக்‌ஷி சிவராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமேஸ்வரம் கோயில் நகைகளின் நிலைகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாள்களாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், கோயிலுக்குச் சொந்தமான நகைகள் குறித்த ஆய்வு மற்றும் கணக்கிடும் பணிகள் இணை ஆணையர் மங்கையர்கரசி தலைமையில் நடந்துவருகிறது. 

நகைகள் குறித்த முழுமையான கணக்கெடுப்பு முடிவுற்ற பின் இதுபற்றிய அறிக்கையை ஆணையர் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!