வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (20/10/2017)

கடைசி தொடர்பு:20:02 (21/10/2017)

’மேடை சரிந்தது, தொண்டர்களின் உற்சாகத்தை காட்டுகிறது’ - தேனியில் தங்கதமிழ்ச்செல்வன் பேச்சு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகில் தேரடியில் அ.தி.மு.க அம்மா அணியின் சார்பில் கட்சியின் 46 வது தொடக்க விழா மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அ.தி.மு.க அம்மா அணியின் சார்பில் கட்சியின் 46 வது தொடக்க விழா இன்று தேனி மாவட்டதில் அந்த அணியின் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெறவிருந்தது. இதில் கதிகாமு உள்ளிட்ட அம்மா அணியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அனைவரும் மேடை ஏறினதும் யாரும் எதிர்பாரத விதமாக விழா மேடை ஒருபுறம் சரிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. விழா தொடர்ந்து சரிந்த மேடையிலே நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் பேசிய தங்கத்தமிழ்ச்செல்வன், "நான் மதுரையில் இருந்து புறப்பட்டது முதல், தொண்டர்களின் தொடர் வரவேற்புகளால் மகிழ்ச்சியடைந்தேன். தொண்டர்களின் அந்த உற்சாகம் மேடைக்கு வரும் வரை நீடித்தது. மேடையில் அதிகமாக தொண்டர்கள் ஏறியதால் தான் மேடை சரிந்தது. இது தொண்டர்களின் உற்சாகத்தை காட்டுகிறதே தவிர வேறோன்றும் இல்லை.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியில் எங்களின் சீலீப்பர் செல்கள் இருபது பேர் இருக்கிறார்கள். அவர்கள் எந்த நேரமும் எங்கள் பக்கம் வரலாம். 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன், ஓ.பி.எஸ் மற்றும் அவரது அணியில் இருந்த 11 பேருக்கு எதிரான வழக்குக்கு தீர்ப்பு வர இருக்கிறது. அதில், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை" என்றார். இந்த பொதுக்கூட்டத்துக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதேநேரம், பெரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமி - பன்னீர் செல்வம் தரப்பின் சார்பாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் இதே போன்றதொரு அ.தி.மு.க துவக்கவிழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.