வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (21/10/2017)

கடைசி தொடர்பு:14:50 (21/10/2017)

"தயவுசெய்து ஜாதியின் நுட்பத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!" பா.இரஞ்சித்

பா.ரஞ்சித்

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி 2 வது அகில இந்திய மாநாட்டின் சாதி ஒழிப்பு - சமத்துவக் கலைவிழா மதுரை செல்லூரில்  நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித், தோழர் சாமுவேல் ராஜ் , புதுவிசை ஆசிரியர் கவிஞர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . .

இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்,“சாதி என்பது சமுதாயத்தில் மிகப்பெரும் அவலம், சாதியை ஒழிப்பது என்பது மேட்டிலிருந்து வெட்டி பள்ளத்தை நிரப்புவதுபோலதான். தாங்கள் உயர்ந்த சாதி என்று நினைத்துக்கொள்பவர்கள், தங்கள் மனதில் எண்ணங்களை வெட்டிக்கொண்டு கீழே விளிம்பில் இருக்கும் மனிதர்களின் நிலையை உணர்ந்து அவர்களைச் சமமாக நினைக்க வேண்டும். அப்போதுதான் மேடு பள்ளம் இல்லாத நிலை, சமுதாயத்தில் உருவாகும். மதுரையின் பெருமைகளைப் பற்றி பல புத்தகங்களில் கூறப்பட்டிருக்கின்றன. சங்கம் வளர்த்த மதுரை, தமிழ் வளர்த்த மதுரை என்று மதுரையின் பெருமையை அவை பேசுகின்றன. 

ஆனால், சினிமாக்களில் மதுரை என்றாலே சாதியப் பாகுபாடுகளைக் கொண்டிருக்கும் நகரம் என்றும். தூங்கும்போதுகூட கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் சித்திரிக்கின்றனர். ஆனால், உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. மதுரையிலும் அமைதியை விரும்பும் மக்கள்தான் உள்ளனர்.

பா.ரஞ்சித்

சினிமா என்பது நம்மைச் சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது. அதையும் தாண்டிய விஷயங்களை நாம் உற்றுப் பார்க்க வேண்டும். கலையை ஓர் அரசியல் பேசும் கருவியாகத்தான் நான் பார்க்கிறேன். சினிமாவால் முழுமையாகச் சாதி ஒழிப்பை முன்னெடுக்க முடியாவிட்டாலும், சாதி ஒழிப்புக்கானத் தூண்டு கோலாகத்தான் நான் பார்க்கிறேன். 

கல்லூரிப் படிப்புக்குப் பின்தான், எனக்குச் சாதியப் பாகுபாடுகளைப் பற்றித் தெரியும். ஆனால், இப்போது பள்ளிக்கூட மாணவர்கள் இடையே சாதியப் பாகுபாடுகள் இருக்கின்றன. மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிப்பிடும் கயிறுகளைக் கட்டிக் கொள்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் இந்தச் சமூகத்தில் இருக்கும் பெரியவர்கள்தாம். நாம்தான் ஏதும் அறியாத மாணவர்களை மாற்றுகின்றோம். நாம் பாகுபாடு பார்ப்பதால்தான் அதையே அவர்களும் பின்பற்றுகின்றனர். நாம் சாதி வேறுபாடாக நினைப்பதைத்தான் அவர்களும் பின்பற்றுகின்றனர். முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் அப்போதுதான் பின்னால் வரும் சந்ததிகள் சாதியைப் பற்றித் தெரியாமல் வளருவார்கள் சாதி எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது. நாம் வாழும் தெருவில் சாதி இருக்கிறது, நம் உறவுகளிடம் சாதி இருக்கிறது, நம் சடங்குகளில் சாதி இருக்கிறது, நாம் சாமி கும்பிடுவதில் சாதி இருக்கிறது. இப்படி எல்லாவற்றிலும் சாதி நம்மோடு கலந்திருக்கிறது.

ரஞ்சித்

 

சாதியை நுட்பமாக அறிந்து சாதியப் பாகுபாடுகளை நீக்க வேண்டும். மனிதனும் மனிதனும் சமம், வேறுபாடுகளே இல்லை என்று கம்யூனிஸம் சொல்கிறது. தோழர் என்ற வார்த்தை அனைவரையும் ஒன்றிணைக்கிறது. அண்ணன், தம்பி உறவில்கூட வேறுபாடு பார்க்க முடியும், தோழர் என்ற வார்த்தையில் வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண், மூத்தவர், இளையவர் என்று எல்லோரும் சமமானவர்கள் என்று அந்த ஒற்றை வார்த்தைச் சொல்கிறது.

இட ஒதுக்கீட்டைப் பற்றி நம்மிடம் நீண்ட காலமாகத் தவறான புரிதல் இருந்துவருகிறது. இட ஒதுக்கீடு என்று ஒன்று இல்லை என்றால் இங்கு பலரும் இருந்திருக்கமாட்டார்கள். 18 சதவிகித இட ஒதுக்கீடை மட்டுமே, ஒடுக்கப்பட்டவர்கள் பெறுகின்றனர். ஆனால், அனைத்து வாய்ப்புகளையும் ஒடுக்கப்பட்டவர்கள்தான் பெறுகின்றனர் எனக் கனவு காணுகின்றனர். இதைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் அப்போதுதான், இட ஒதுக்கீட்டைப் பற்றி ஒரு புரிதல் உண்டாகும்.

டிஜிட்டல் இந்தியாவில் எல்லா இடத்திலும் சாதி இருக்கிறது. பிராமணர் மட்டும்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா இப்படி ஒரு சட்டம் தேவையா எப்போது இந்தச் சட்டம் மாறும். அம்பேத்கரிஸம் கம்யூனிஸம் தேவை. அப்போதுதான் சாதி ஒழியும். சாதி இல்லாதவனாகத் தமிழன் மாற வேண்டும். அப்போதுதான், அவன்  தமிழன் என்று வெளியே சொல்லிக்கொள்ள முடியும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்