வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (21/10/2017)

கடைசி தொடர்பு:16:35 (21/10/2017)

சினிமா கவர்ச்சிக்காரர்களை நம்ப வேண்டாம்- கி.வீரமணி

கீ.வீரமணி

"தமிழகத்தில், சினிமா கவர்ச்சியை மட்டுமே முதலீடாகக்கொண்டு அரசியலில் ஈடுபடுபவர்களைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டாம்" என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திராவிடர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் இன்று கடலூரில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழகத்தில் இப்போது திராவிட ஆட்சி என்றாலும்கூட மத்திய அரசின் கைப்பாவையாகவே உள்ளது. மத்தியில் காவி ஆட்சி, மாநிலத்தில் ஆவி ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மருத்துவம், பல் மருத்துவக் கல்வி ஆகியவற்றிற்கு அகில இந்திய அளவில் 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வு முறை சமூக நீதிக்கும் சட்டத்துக்கும் எதிரானவை.

கீ.வீரமணி கூட்டம்
  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது, உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துத் தீர்ப்பு வழங்கிய பிறகும், அவ்வாறு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்திலேயே மத்திய அரசு தெரிவிப்பது கேலிக்கூத்தாக உள்ளது. சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு சட்டத் திருத்தம் தேவை. தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பும், மீன்பிடி உரிமைக்கு உத்தரவாதமும் தேவை. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மணவால மாமுனிகள் கோயிலில் பிற சமூகத்தினர் அவமதிக்கப்படுவதை எதிர்த்துக் கட்டாயம் போராட்டம் நடத்தப்படும். சிதம்பரம், சேலம், தஞ்சை போன்ற பல்கலைக் கழகங்களில், பாடத்திட்டத்தில் உள்ள போலி விஞ்ஞானமான ஜோதிடத்தை விலக்க வேண்டும். தமிழகத்தில் சினிமா கவர்ச்சியை மட்டுமே முதலீடாகக்கொண்டு அரசியலில் ஈடுபடுபவர்களைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டாம்" என்றார்.