வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (21/10/2017)

கடைசி தொடர்பு:15:01 (21/10/2017)

100 மார்க் எடுத்ததால் விமானப் பயணம் - அரசுப் பள்ளி ஆசிரியையின் அசத்தல் பரிசு

மாணவிகள்

சிறந்த மதிப்பெண் எடுத்து நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கமளிக்கும்விதமாகப் பரிசுகள் அளிப்பது வழக்கம். இந்த வரிசையில் அம்பத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியையின் பரிசு கொஞ்சம் வித்தியாசமானதுதான். தனது வகுப்பில் யார் 100 மதிப்பெண் வாங்கினாலும், அவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 

சென்னை, அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் செல்வகுமாரி. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தி வருகிறார். ஒருநாள் பாடத்திட்டத்தில் உலக வரைபடத்தில் உள்ள இடங்களை குறிப்பது குறித்து பாடம் எடுத்தபோதுதான், அவர் மனதில் இப்படியொரு எண்ணம் உதயமாகியிருக்கிறது. ' பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தால் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வேன்' என அறிவித்தார் ஆசிரியை செல்வகுமாரி. அதன்படி தேர்வில் 100 மதிப்பெண் எடுத்தவர்களை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆசிரியை செல்வகுமாரியின் முயற்சியை கல்வி அதிகாரிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். 

ஆசிரியை செல்வகுமாரிசெல்வகுமாரியிடம் பேசினோம். “ வரைபடங்களில் விமான வழித்தடங்கள் குறித்து பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் இப்படியொரு பரிசை அறிவித்தேன். இதனால் மாணவிகள் ஊக்கத்துடன் படிப்பார்கள் என எதிர்பார்த்தேன். கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் என் வகுப்பில் ஒரே ஒரு மாணவி சரண்யா மட்டும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருந்தார். அந்த ஆண்டு ஆறு மாணவிகள் 99 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருந்தனர்.

இதேபோல், மற்றொரு வகுப்பைச் சேர்ந்த மாணவி யமுனா ஆங்கிலத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருந்தார். எனவே, இந்த இரு மாணவிகளையும் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றேன். என் சொந்த செலவில் என்பதால் அதற்குத் தகுந்தாற்போன்ற இடத்தைத் தேர்வு செய்தோம். கோவையில் ஒரு வாடகைக் கார் எடுத்து அங்குள்ள முக்கியச் சுற்றுலாத்தளங்களை சுற்றிப் பார்த்த பின்னர் ரயிலில் சென்னைக்குத் திரும்பினோம். இந்தப் பரிசுத் திட்டம் இந்தாண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கும் ஓர் ஊக்கமாக அமைந்துள்ளது" என்றார் நெகிழ்ச்சியோடு.