கண்டுகொள்ளாத கலெக்டர்: பயணிகளை அச்சுறுத்தும் உடன்குடிப் பேருந்து நிலையக் கட்டடம்!

udankudi busstand

‘‘நாகை மாவட்டம் பொறையாரில் பணிமனை இடிந்து விபத்துக்குள்ளானதைப்போல தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிப் பேருந்து நிலையமும் இடிந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது’’ என தூத்துக்குடி மாவட்ட ஆம்ஆத்மி இணை ஒருங்கிணைப்பாளர் குணசீலன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய குணசீலன், ‘‘கடந்த சில மாதத்துக்கு முன்பு கோவை மாவட்டம் சோமனூர் பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தின் guna seelanமேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததோடு 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் நடந்தது நேற்றைய நிலைமை. நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலியானது இது இன்றைய நிலைமை. ஆனால், நாளை தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிப் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பொதுமக்கள் பலர் பலியாயினர் என நாளை ஒருநாள் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் செய்தி வெளியாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக மெயின் ஊர் உடன்குடி.உடன்குடியைச் சுற்றியுள்ள 60 கிராம மக்களுக்கு இதுதான் பெரிய ஊர்.பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், பொதுமக்கள் என தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் உடன்குடிப் பேருந்து நிலையத்திலிருந்து செல்வார்கள். கடந்த 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது இந்தப்  பேருந்து நிலையம். கடந்த 6 ஆண்டுக்கு முன்பு இந்தப் பேருந்து நிலையம் ரூ.6 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது. ஆனாலும், பஸ் நிலையத்தில் அனைத்துச் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் வெடிப்பு ஏற்பட்டும் இடிந்த நிலையிலும் கம்பிகள் தெரிகின்றன. கடந்த ஆண்டு பேருந்தை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்த இருவர்மீது கட்டடத்துண்டுகள் விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தப் பேருந்து நிலையத்துக்குள் 15 கடைகள் உள்ளன. கடைகளின் மேற்கூரைகளும் இதே நிலையில்தான் உள்ளன. அரசுக் கட்டடத்தைக் கட்டித்தரும் கான்ட்ராக்டர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கமிஷன் தலையீட்டால் கட்டப்படும் கட்டடம் தரமில்லாமல்போகிறது. கட்டடம் கட்டப்பட்ட சில ஆண்டுகளிலேயே இதுபோன்ற விபத்து ஏற்பட்டுவிடுகிறது.

udankudi bus stand

இதனால் சாலையோரங்களில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையில் நிற்கக்கூட மக்கள் பயப்படுகிறார்கள். அரசுக் கட்டடங்களைக் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வுசெய்து, கட்டடத்தின் நிலைகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி, அதில் சரிசெய்ய வேண்டியவற்றைச் சரி செய்ய வேண்டும் என்ற ஜி.ஓ-வை எந்த அரசுக் கட்டடத்துக்கும் இதுவரை பின்பற்றியதாகத் தெரியவில்லை. மழைக்காலம் தொடங்கவிருப்பதால் விரைவில் இந்தப் பேருந்து நிலையத்தை அரசு சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளாக நேரிடும். விபத்துக்குள்ளான பிறகு, இழப்பீடு வழங்குவதா அரசின் வேலை. விபத்து வரும் முன் தடுப்பதுதானே அரசின் கடமை’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!