‘அ.தி.மு.க பிளவுக்கு இவர்கள்தான் காரணம்'! - கொதிக்கும் தினகரன் ஆதரவாளர்

நிலவேம்பு குடிநீர் விநியோகம்

அ.தி.மு.க பிளவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்தான் காரணம் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அம்மா அணிச் செயலாளர் திருவேற்காடு சீனிவாசன் தெரிவித்தார். 

அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அம்மா அணிச் செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன், நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். புழல் ஒன்றியத்தில் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்ட அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு யார் காரணம்?

"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவின் தலைமையில் அ.தி.மு.க செயல்பட முன்மொழிந்தவர்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உண்டு. பொதுக்குழுவில் சசிகலாவை, பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்து, அந்தத் தீர்மான நகலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர். அடுத்து, சசிகலாவை அ.தி.மு.க-வின் சட்டசபைத் தலைவராகத் தேர்வு செய்து ஆளுநரிடம் அந்தக் கடிதத்தை எம்.எல்.ஏ-க்கள் கொடுத்தனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து நாடகத்தை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வத்தால் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலாவும் தினகரனும்தான். சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கட்சி நிர்வாகிகள் அஃபிடவிட்டை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தவர்கள், மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தியதோடு இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரினர். இதனால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்துக்குப் புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும் சசிகலாவுக்கு அ.தி.மு.க அம்மா என்ற பெயரைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இடைத்தேர்தல் பிரசாரத்தில் தினகரனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனம் மாறிவிட்டார். சசிகலாவையும் தினகரனையும் எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். கட்சிக்குத் துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வதுக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளார். இதை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னால் சிலர் சென்றுள்ளனர். ஆனால், அடிமட்ட தொண்டர்கள் சசிகலா, தினகரன் தலைமையை ஏற்றுவிட்டனர். வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள கட்சி ஆண்டு விழாவில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பார்கள். பரோல் நிபந்தனை காரணமாக சசிகலாவைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பதவியிலிருக்கும் அவரது ஆதரவாளர்கள் சந்திக்கவில்லை. தினகரன் கூறியதுபோல எடப்பாடி பழனிசாமி தரப்பில் எங்களது ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். தேவைப்படும்போது அவர்கள் வெளியில் வருவார்கள்"

அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் வரும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?திருவேற்காடு பா. சீனிவாசன்

"ஆட்சியும் அதிகாரமும் அவர்கள் கையில் இருக்கலாம். ஆனால் அ.தி.மு.க.வின் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். நிலவேம்புக் குடிநீர் போன்ற மக்கள் சேவையில் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம். இதனால் மக்களும் எங்களை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். மக்களுக்கு நல்லது செய்வதை இந்த அரசு தடுத்தால் அவர்களுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும். இதனால், நிலவேம்புக் குடிநீர் விநியோகத்தில் எங்களுக்கு எந்தவித தடையும் ஏற்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை ஆவடி, திருநின்றவூர், திருவேற்காடு, மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், புழல் ஆகிய பகுதிகளில் இலவசமாக நிலவேம்புக் குடிநீரை விநியோகித்துள்ளோம்

டெங்குக் காய்ச்சலால் மக்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிலவேம்புக் குடிநீரை ஆர்வமாகக் குடிக்கின்றனர். உள்ளாட்சித்துறையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் டெங்கு பாதிப்பு வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் அரசு இயந்திரம் செயலிழந்துவிட்டது. கொசுவைக் கட்டுப்படுத்த எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் அதிகாரிகளும் எந்த வேலைகளையும் செய்யவில்லை. இது, மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஜெயலலிதா ஏற்படுத்திய இந்த ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக அதிகாரம் எங்கள் கையில் இல்லை என்றாலும் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் கட்சியும் ஆட்சியும் எங்கள் கைக்கு வரும். அப்போது ஜெயலலிதாவின் கனவு நிஜமாகும்" 

 அ.தி.மு.க. ஆண்டு விழா தினகரன் தரப்பினர் புறக்கணித்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே?

 "துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே துரோகிகளின் பிடியில் அ.தி.மு.க. தலைமைக் கழகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆண்டு விழாவை நடத்தியுள்ளனர். அதற்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் வரும் 24 ஆம் தேதி, எம்.ஜி.ஆர். இல்லத்தில் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. அந்த விழாவைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள்"

Do you like the story?

Please Appreciate the Author by clapping!