'மோடிக்கு எப்படி தைரியம் வந்தது' - திருமங்கலத்தில் அதிர்ந்த அதிமுக எம்.எல்.ஏ

அ.தி.மு.க அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் அதிரடியாகப் பேசி வருவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. தங்கள் கட்சி பி.ஜே.பி.யின் தயவில்தான் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் கூற ஆரம்பித்துவிட்டார்கள். தேனியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ‘’எங்கள் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது, எங்களுக்கு ஆதரவாக மோடி இருக்கிறார்’’ என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச, அதே நாளில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த அ.தி.மு.க தொடங்கிய தினப் பொதுக்கூட்டத்தில் பேசிய திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ், மோடியிடம் மாட்டிக்கொண்டு அ.தி.மு.க தவிப்பதை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அதிமுக

அவர் பேசும்போது, ‘‘இந்தக் கட்சி எப்பேர்பட்டது. எம்.ஜி.ஆர் ஆரம்பித்தபோது அருமையாக இருந்தது. எம்.ஜி.ஆரோட புகழ் கொடிகட்டி பறந்தது. அந்தளவுக்கு இருந்த கட்சிக்கு இன்று சோதனை காலம் ஏற்பட்டுள்ளது, இப்போது அ.தி.மு.க-வில் பதவி ஆசை பிடித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் விலகணும் விலகி இருக்கணும். இந்தக் கட்சியை அழிப்பதற்கு மோடிக்கு எப்படி தைரியம் வந்தது. யார் சொன்னா, இந்தத் தைரியத்தைக் கொடுத்தவர்கள் அ.தி.மு.க-வில் உள்ளவர்கள்தான், ஊடுருவிகள், எட்டப்பர்களை, துரோகிகளைக் களை எடுக்கணும்’’ என்று யாரையோ குறிவைத்து ஆக்ரோஷமாகப் பேசினார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயகுமாரும் அமர்ந்திருந்தார். தற்போது போஸின் பேச்சு, அ.தி.மு.க-விலும் பி.ஜே.பி-யிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!