வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (21/10/2017)

கடைசி தொடர்பு:21:01 (21/10/2017)

கல்லணையில் முறைப்பாசனம்... விவசாயிகள் கடும் அதிருப்தி

காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பா நெல் சாகுபடிக்காக அக்டோபர் 5-ம் தேதி கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள், சம்பா சாகுபடிக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஆயத்தமாகி வருகிறார்கள். குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதத்துக்காவது தொடர்ச்சியாகத் தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பியிருந்தார்கள். இந்நிலையில் அக்டோபர் 23-ம் தேதியிலிருந்து முறைப்பாசனம் மேற்கொள்ளப்படும் எனப் பொதுப்பணித்துறை காவிரி வடிநில கோட்டமும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் இணைந்து அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

சம்பா சாகுபடி வெற்றிகரமாக நடைபெற அதிகபட்சம் ஆகஸ்ட் மாதத்துக்குள் தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், மிகவும் தாமதமாக அக்டோபர் 5-ம் தேதிதான் கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆறுகளில் தண்ணீர் பாய்ந்தோடி, கிளை ஆறுகளைக் கடந்து, ஒரு சில நாள்களுக்கு முன்புதான் உள்ளூர் வாய்க்கால்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. நாற்று தயாரிப்புப் பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்காகத் தினமும் தொடர்ச்சியாகத் தண்ணீர் கிடைத்தால்தான் அனைத்து விவசாயிகளும் முழுமையாக நாற்று உற்பத்தி செய்து நடவு செய்ய முடியும். நடவுக்குப் பிறகு இளம் பயிர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்காவது தொடர்ச்சியாகத் தண்ணீர் கொடுத்தாக வேண்டும். ஆனால், அக்டோபர் 23-ம் தேதியிலிருந்து கல்லணையில் இருந்து முறைப்பாசனம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் காவிரி, அடுத்த ஒரு வாரம் வெண்ணாறு என மாறி மாறி, தண்ணீர் திறக்கப்படும். இதனால் சம்பா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படும் என விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். குறைந்தபட்சம் இன்னும் ஒன்றரை மாதத்துக்காவது தொடர்ச்சியாகத் தண்ணீர் திறக்க வேண்டும் என்கிறார்கள்.