”அரசியலுக்கு வர்றேன்’னு இதுவரை விஜய் சார் சொல்லியிருக்காரா..!?” காயத்ரி ரகுராமின் 'மெர்சல்' வாய்ஸ்

'மெர்சல்' விஜய்

டிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான திரைப்படம், 'மெர்சல்'. மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்களை நீக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் வலுவாகக் குரல் எழுப்பி வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய வசனங்களும் சர்ச்சைக்குரியதாக இருப்பதாகப் பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில், தமிழக பா.ஜ.க உறுப்பினரும், நடிகையும், சினிமா நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், படத்தைப் பொழுதுபோக்கு அடிப்படையில் மட்டுமே பார்க்க வேண்டும் எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசியபோது... 

மெர்சல் படம் பற்றி காயத்ரி ரகுராம் பேச்சு

"நானும் 'மெர்சல்' படத்தைப் பார்த்தேன். ஒரு சினிமா ரசிகையாகப் பார்த்ததில், எனக்கு அந்தப் படம் பிடிச்சிருந்துச்சு. சர்ச்சைக்குரிய வசனங்கள் இருக்கிற மாதிரி தெரியலை. ஆனால், சில வசனங்களை நீக்கணும்னு பலரும் சொல்லிட்டிருக்காங்க. பொதுவாக, சமூகத்தில் நடக்கும் விஷயங்களை சினிமாவில் பிரதிபலிக்கிறது இயல்புதான். அது பிடிச்சிருந்தால் ரசிக்கலாம். இல்லைன்னா, அமைதியா விட்டுடணும். கிராமத்துத் தலைவன், டாக்டர், மேஜிக்மேன் என மூணு ரோலில் விஜய் நடிச்சிருக்கார். மூணு ரோலிலும் சில சோஷியல் மெசேஜ் கொடுத்திருக்கார். அவர் நிஜத்தில் அந்தக் கதாபாத்திரங்களாக மாற முடியாது. நமக்கு அந்தக் கதாபாத்திரங்கள் பிடிச்சிருந்தால் பாராட்டலாம்; கைத்தட்டலாம். பிடிக்கலைன்னா, நடிப்பை விமர்ச்சிக்கலாம். இல்லைன்னா, அமைதியா விட்டுடணும். வசனங்கள் உள்ளிட்ட விஷயங்களுக்கு அவர் முழு பொறுப்பில்லை. நடிக்கிறதுதான் அவர் பங்கு. வசனம், காட்சியமைப்பு, மற்ற நடிகர்களின் நடிப்பு உள்ளிட்டவைகளில் ஹீரோவின் பங்கு பெரும்பாலும் இருக்காது.  

மெர்சல் விஜய்

அரசின் சாதக, பாதகங்களை யார் வேணாலும் ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்யலாம். அரசின் மேல் நிஜமாகவே தவறு இருக்கும்பட்சத்தில், அதைச் சரிசெய்துக்கணும். 'ஏன் தவறா விமர்சனம் செய்தீங்க?' எனக் கேட்பது ஆரோக்கியமானதில்லே. எந்த ஒரு கருத்தையும் மக்களிடம் யாரும் திணிக்க முடியாது. சினிமா உள்ளிட்ட ஊடகங்களின் வாயிலாகச் சொன்னாலும், எது சரி தவறு என மக்களே தீர்க்கமா முடிவுப் பண்ணிப்பாங்க. அதனால், 'மெர்சல்' ஒரு பொழுதுபோக்குக்கானது என்ற அடிப்படையில்தான் பார்க்கணும். அப்படித்தான் நான் பார்த்தேன். இது என் தனிப்பட்ட கருத்து. இது விஷயமா, நிறைய விவாதங்கள் எழுந்ததால், 'மெர்சல்' படம் பற்றிய என் கருத்துகளை ட்விட்டர்ல பதிவு செய்துட்டிருக்கேன். சினிமா, அரசியல் என இரண்டு தளங்களிலும் நான் இயங்கிட்டிருக்கேன். ஆனாலும், இந்த இரண்டு துறையைச் சார்ந்தவளாக இல்லாமல், ஒரு சினிமா ரசிகையாகவே இதைச் சொல்றேன். 

மெர்சல் விஜய்

'நான் அரசியலுக்கு வரப்போறேன்'னு இதுவரை நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எந்த இடத்திலும் சொல்லலை. ஒருவேளை அவர் மனசுல அந்த எண்ணம் இருந்தால், அது அவரின் தனிப்பட்ட விருப்பம். குடிமக்களில் யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம். 'அரசியலுக்கு வரும் எண்ணத்தில்தான், 'மெர்சல்' படத்தில் அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் வசனங்களை இடம்பெறச் செய்திருக்கிறார். வசனங்களைப் பேசியிருக்கார்' என நாமே யூகத்தில் சொல்லக்கூடாது. இவ்வளவு காரசாரமாப் பேசப்படும் 'மெர்சல்' படத்தில், விஜய்க்குப் பதில் வேறு புதுமுக நடிகர் நடிச்சிருந்தால் இவ்வளவு பெரிய தாக்கம் வந்திருக்காது. இதையும் யோசிக்கணும். 

mersal vijay

படம் ஏற்கெனவே சென்சார் போர்டினால் சென்சார் செய்யப்பட்டுதான் ரிலீஸாகியிருக்கு. அப்படி இருக்கிறப்போ சர்ச்சைக்குரிய வகையில் பேசறது சரியில்லே. இதையே வரும் காலத்தில் பலரும் தொடர்ந்தால், சினிமாவுக்கு நல்லதில்லே. மருத்துவத் துறையில் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி வசனங்கள் சில விநாடிகள்தான் ஒளிபரப்பாகுது. ஆனால், இதைச் சர்ச்சைக்குரியதாக்கி அந்தப் படத்தைப் பார்க்காதவர்களையும் பார்க்கவைக்கும் ஆர்வத்தைத்தான் தூண்டிட்டிருக்காங்க'' என்று அழுத்தமாகச் சொல்கிறார் காயத்ரி ரகுராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!