தி.நகர் அன்று இப்படித்தான் இருந்தது என்றால் நம்புவீர்களா..?! | Behind the story of Thyagaraya nagar to T.nagar

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (22/10/2017)

கடைசி தொடர்பு:13:25 (23/10/2017)

தி.நகர் அன்று இப்படித்தான் இருந்தது என்றால் நம்புவீர்களா..?!

தி.நகர் , t.nagar

சென்னைக்கு என்று பல முகங்கள் இருப்பினும் சென்னையின் முக்கியமான முகங்களுள் ஒன்றுதான் தி.நகர். தீபாவளி, பொங்கல் என்று விழாக்கால நாள்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் இங்கு திருநாள்தான். சென்னைக்குப் புதிதாக வந்தவர்கள் ஒருமுறையாவது சுற்றிப்பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படும் இடங்களில் இந்த தி.நகரும் ஒன்று.

‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’யில் இந்த தி.நகர் வாழ்வளித்த குடும்பங்கள் பல என்றுதான் சொல்ல வேண்டும். வானை முட்டும் பல கடைகள் தி.நகரை ஆக்கிரமித்து இருப்பினும், இங்கு வரும் மக்களின் பெரும்பாலான விருப்பம் அங்கு நிறைந்திருக்கும் ரோட்டுக் கடைகளே. தீபாவளியின் கோலாகல முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக தி.நகருக்குள் உள்ளே நுழைந்து வெளியே வந்திருக்க வேண்டும். இன்று ‘தி.நகர்’ என்று அழைக்கப்படும் தியாகராய நகரின் உண்மை முகம் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு ஏன் இன்னும் சென்னைவாசிகளில் பலருக்கு தி.நகரின் விரிவாக்கம் தியாகராய நகர் என்பதே தெரியவில்லை.

தி.நகர் , t.nagar

அவ்வளவு மக்கள் கூட்டமும், ஆரவாரமும் நிறைந்து இருக்கும் இந்த தி.நகர் 1900களின் தொடக்கத்தில் அமைதியான ஒரு அழகிய ஏரிக்கரையோர கிராமமாக இருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா, நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில், இன்று நாம் பார்க்கும் இந்த தி.நகர் ஒருகாலத்தில் “லாங் லேக்” என்று அழைக்கப்பட்ட நீள் தடாகமாக இருந்திருக்கிறது. 1911-ம் வருடத்தில் ஆங்கிலேய அரசு நிர்வாகப் போக்குவரத்து வசதிக்காக மாம்பலம் ரயில் நிலையத்தை அமைத்த பிறகுதான் தி.நகர் வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்கிறது. 1920-ம் ஆண்டு வாக்கில் ஆங்கிலேய அரசு மதராஸ் மாகாணத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், “மதராஸ் டவுன் ப்ளானிங் ஆக்ட்-1920“ என்னும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டம்தான் நாம் இன்று பார்க்கும் இந்த தி.நகரின் வளர்ச்சிக்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

மேற்கூறிய, மதராஸ் டவுன் பிளானிங் சட்டத்தின்படி கட்டிமுடிக்கப்பட்டதின் முதல் திட்டமிடப்பட்ட குடியிருப்புப் பகுதி இந்த தி.நகர் என்பது இன்னும் சிறப்பு. ஆனால், இந்தக் குடியிருப்புப் பகுதி பின்னாளில் வணிக மையமாக மாறியது யாரும் எதிர்பார்க்காத ஒன்றே. இந்த தி.நகருக்கு ‘தியாகராய நகர்’ என்னும் பெயர் எப்படி வந்தது தெரியுமா?, 1923-ம் ஆண்டு வாக்கில் சென்னையை ஆட்சி செய்துகொண்டிருந்த நீதிக் கட்சியின் தலைவர்தான் இந்த பிட்டி தியாகராயர். கட்சிக்கு இவர் தலைவராக இருந்தாலும், முதல்வர் பதவியை ஏற்க மறுத்த இவருக்குச் சிறப்பு செய்யும் வகையில், அப்போதைய முதல்வராக இருந்த ஆந்திராவைச் சேர்ந்த பனகல் அரசர்தான் இந்தப் பெயரைச் சூட்டினார்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் சமூகப்போராளியுமான சௌந்தரபாண்டியனார் நினைவாகவே சென்னை நகரின் முக்கியக் கடைவீதிகள் அமைந்துள்ள பாண்டி பஜார் பகுதிக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. அந்தக் கடைத்தெருவின் நுழைவு வாயிலில், அவரது சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தி நகர் , t.nagar

தி.நகரின் தெருக்களில் இருக்கும் பெயர்களில் எல்லாம் ஒருவித அரசியல் முகம் இருக்கும். ஆனால், அங்கு இரண்டு தெருக்களின் கதை மட்டும் கொஞ்சம் வித்தியாசமானது. தி.நகரின் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த நேரம் அது. எதிர்பாராவிதமாக அங்கு ஏற்பட்ட மண் சரிவில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நாதமணியும், கோவிந்தனும் இறந்துவிட்டார்கள். அவர்களின் நினைவாக பிரிட்டிஷ் அரசாங்கம் சூட்டியதுதான் இந்த நாதமணி தெருவும், கோவிந்தன் தெருவும். இப்படிப் பல உருமாற்றங்கள், பெயர் மாற்றங்கள் பெற்ற இந்த தி.நகர் தற்போது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திலும் இடம் பிடித்திருக்கிறது.

தி.நகருக்குப் பின் இப்படி ஒரு வரலாறு இருக்கிறதென்றும், இது ஓர் ஏரிக்கரையாக ஒரு காலத்தில் இருந்தது என்பதற்கும் ஆதாரமாக இருப்பவை ‘லேக் பேக்’ ரோடு, நுங்கம்பாக்கம் ‘லேக் ஏரியா’, ‘லேக் வியூ’ என்னும் பெயர்கள் மட்டும்தான். என்னதான் மாற்றங்கள் மட்டுமே மாறாததாக இருப்பினும், ஒரே நூற்றாண்டுக்குள் இங்கு ஓர் ஏரி இருந்தது என்று தெரியாத அளவுக்கு ஏற்பட்ட வளர்ச்சி கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. எதிர்காலத்தில் வளர்ச்சி என்னும் பெயரில் இன்னும் என்னவெல்லாம் மாயமாக இருக்கிறதோ தெரியவில்லை.


டிரெண்டிங் @ விகடன்