டெங்கு காய்ச்சல்: சமூக வலைதளங்களில் சேலஞ்ச் விடும் கோவை மாநகராட்சி | Dengue issue: Coimbatore corporation give house challenge in social media

வெளியிடப்பட்ட நேரம்: 22:25 (21/10/2017)

கடைசி தொடர்பு:22:25 (21/10/2017)

டெங்கு காய்ச்சல்: சமூக வலைதளங்களில் சேலஞ்ச் விடும் கோவை மாநகராட்சி

டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக, சமூகவலைதளங்களில் சேலஞ்ச் டாஸ்க் வழங்கி விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறது கோவை மாநகராட்சி.

தமிழகம் முழுவதையும், கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தி வருகிறது டெங்கு காய்ச்சல். தினசரி ஏராளமான குழந்தைகள், பெண்கள் என்று அனைவரது உயிரையும் பறித்து வருகிறது டெங்கு. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறிவந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. நாட்டிலேயே டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தமிழகம்தான்.

இதனால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, மருத்துவக் குழு தமிழகத்தில் ஆய்வு செய்தது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, கோவை மாநகராட்சி சமூகவலைதளங்களில் சேலஞ்ச் டாஸ்க் வழங்கி விழிப்பு உணர்வு வழங்கி வருகிறது. அதன்படி, நமது வீடுகளில் கொசுக்கள் உற்பத்தி ஆவதற்கு வாய்ப்பு உள்ள இடங்களை சுத்தப்படுத்துவது, தண்ணீர் தொட்டி, குடம், வாலி போன்றவற்றை மூடி வைப்பது, தண்ணீர் தேங்கும் இடங்களை சுத்தப்படுத்துவது போன்றவற்றை செய்ய வேண்டும். பிறகு, அவற்றை போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் #DengueHouseChallange என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட வேண்டும்.

குறிப்பாக, இந்த பதிவின்போது நமது நண்பர்களை டேக் செய்து, அவர்களுக்கும் டெங்கு ஹவுஸ் சேலஞ்ச் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி கூறியுள்ளது. இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன், "அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும், பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்கினால்தான் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். முதலில் நமது வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நமது வீட்டை சுற்றி, கொசுக்கள் உற்பத்தியாவதற்கு வாய்ப்பு உள்ள இடங்களை கண்டறிந்து அதை சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம். இதுதான் டெங்குவை கட்டுப்படுத்த முடியும். அனைவரும் இந்த சேலஞ்சை ஏற்றுக் கொண்டு செய்ய வேண்டும். மேலும், தங்களது நண்பர்களுக்கும் டேக் செய்து விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.


[X] Close

[X] Close