அஸ்வின் சொல்லும் 618 விக்கெட் கணக்கு..! | Aswin says If I will get 618 wickets that will be my last test

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (22/10/2017)

கடைசி தொடர்பு:05:30 (22/10/2017)

அஸ்வின் சொல்லும் 618 விக்கெட் கணக்கு..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் அஸ்வின், '618 விக்கெட் எடுத்தவுடன் ஓய்வு பெற விரும்புவதாக' தெரிவித்துள்ளார். 

அஸ்வின்

வெளிநாட்டுப் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள அஸ்வின் இந்தத் தகவலை தெரிவித்திருக்கிறார். அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, "நான் அனில் கும்ப்ளே-வின் மிகப்பெரிய ரசிகன். அவர் 619 விக்கெட் வீழ்த்தி ஓய்வு பெற்றிருக்கிறார். அவரைப் பின்பற்றி 618 விக்கெட் எடுத்தால் நன்றி சொல்வேன். அப்படி 618-வது விக்கெட் எடுக்கும் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாகவும் இருக்க வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார் அஸ்வின். 

இந்தப் போட்டியில் இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் ரங்கனா ஹெராத்தையும் பாராட்டி இருக்கிறார் அஸ்வின். 'ஹெராத் 39 வயதானாலும் தன்னுடைய பந்து வீச்சில் முன்னேற்றத்தைக் காட்டி வருகிறார். கடுமையான உழைப்பின் மூலம் துல்லியமான பந்துவீசி வருகிறார். அண்மையில் அபுதாபியில் நடந்த டெஸ்ட் போட்டியில் 400-வது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். இவரையும் என்னுடைய ரோல் மாடல்களில் ஒருவராகக் கருதுகிறேன். ஒவ்வொரு நாளும் தடைகளை உடைத்து வருகிறார். உடல்வாகில் வயது வெளிப்பட்டாலும் அதனையும் மீறிச் செயல்பட்டு சாம்பியன் கிரிக்கெட்டராகவே இருக்கிறார். பந்து வீச்சில் அழுத்தத்தைக் கூட்டுவது அவருக்குச் சிறப்பாய் அமைகிறது' என்று கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், தனக்கு 31 வயதானாலும் ஹெராத் போல் சாதனைப் படைக்கவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 

அஸ்வின்

தற்போது அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 292 விக்கெட் எடுத்து முத்திரை பதித்து வருகிறார். பேட்டிங்கில் 52.4 ஸ்ட்ரைக் ரேட்டிங்கை வைத்திருக்கிறார். ஒரு நாள் போட்டில் 150 விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். டெஸ்ட் போட்டில் பந்துவீச்சில் 25.26 சராசரியையும், ஒருநாள் போட்டில் 32.91 சராசரி புள்ளியை வைத்திருக்கிறார். 

ஒரு நாள் போட்டியில் இன்னமும் இவரது திறன் வெளிப்படாமலேயே இருக்கிறது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் 17 விக்கெட்டை மட்டும் எடுத்து 40.58 என்ற சராசரி புள்ளிகளைக் கொண்டிருக்கிறார். இவர் அண்மையில் நடந்த ஶ்ரீலங்கா, ஆஸ்திரேலியா தொடரிலும் சேர்க்கப்படவில்லை. மேலும் தற்போது நடைபெறும் நியூசிலாந்து தொடரிலும் சேர்க்கப்படவில்லை. 

அஸ்வின்

'நான் ஒய்வளிக்கப்பட்டிருப்பது குறித்துக் கருத்துச்சொல்ல ஒன்றுமில்லை. எனக்கு ஒய்வளிப்பது குறித்து முடிவெடுப்பது அணி நிர்வாகத்தின் கையில்தான் இருக்கிறது. நிர்வாகத்தின் முடிவில் தலையிட முடியாது. ஆனால், நான் ஒவ்வொரு நாளும் கடந்த காலத்தை விடச் சிறப்பான முறையில் பந்து வீசுவதற்கு என்னுடைய பந்துவீச்சு திறனை மெருகூட்டி மேம்படுத்தி வருகிறேன். நாளைக்கே எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் என்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்லி உள்ள அஸ்வின், ' தற்போது சர்வதேச அரங்கில் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருப்பது கடினமான விஷயம்' என்று தெரிவித்துள்ளார் அஸ்வின்.

இந்தப் பேட்டியின் மூலம்,  'நான் இப்போது ஓய்வுப்பெறபோவதில்லை' என்று மறைமுகமாக கருத்துதெரிவித்துள்ள அஸ்வின், அணியில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக பந்துவீச தயாராக இருக்கிறேன்'  என்றும் பதிவு செய்திருக்கிறார்.