'ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி..?' - ஹெச்.ராஜாவை சாடும் விஷால்

‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஹெச்.ராஜா ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.

vishal

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா, ‘நான் மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தேன்’ என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஷால், 

’ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

ஹெச். ராஜா அவர்களுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டுப் பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதைச் செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதைக் கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!