திருச்செந்தூரில் எதிரொலிக்கும் சஷ்டி விரத பக்தர்களின் பஜனை! | The sasti fasting devotees bajans in Thiruchendur

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (22/10/2017)

கடைசி தொடர்பு:10:27 (23/10/2017)

திருச்செந்தூரில் எதிரொலிக்கும் சஷ்டி விரத பக்தர்களின் பஜனை!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சஷ்டி விரதத்தை துவங்கிய பக்தர்கள் பஜனை, அங்கபிரதட்சணம் செய்துவருவதால் திருச்செந்தூர் முழுவதுமே பக்தர்களின் பஜனைப் பாடல்களும் ‘அரோகரா’ கோஷமும் எதிரொலித்து வருகிறது. 

trichendur bajanai

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 21-ம் தேதி கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளி தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையுடன் தங்கச்சப்பரத்தில் பவனி வருதலும் நடந்துவருகிறது. சஷ்டி விழா தொடங்கிய அன்றே சஷ்டி விரதமிருக்கும் பக்தர்களின் விரதமும் துவங்கியது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலிருந்தும், வெளிநாட்டு பக்தர்களும் திருச்செந்தூரில் கூடியுள்ளனர்.

pakthargal anga pirathtchanam

திருக்கோயில் வெளிப் பிராகாரத்தில் பஜனை வாத்தியங்களுடன் தாளம் போட்டுக் கொண்டே குழுவாக நடந்துகொண்டே முருகப் பெருமானின் பாடல்களைப் பாடியபடியே சுற்றிவருகின்றனர். வள்ளிகுகை, காவடி மண்டபம் ஆகிய பகுதிகளில் மர நிழலில் வட்டமாக அமர்ந்து கொண்டும் பக்திப் பாடல்களை பாடியும், கை தட்டியும் அதற்கேற்றபடி நடனமாடியும் வருகிறார்கள்.

pakthargal bajanai

பஜனைப் பாடல்கள் பாடி வரும் பக்தர்களிடம் பேசினோம், ‘’ கடந்த 16 வருஷமா சஷ்டி விரதம் இருந்து திருச்செந்தூருக்கு வர்றோம். சஷ்டி விரதம் துவங்கிய முதல் நாளில் இருந்து திருக்கல்யாணம் முடியுற வரைக்கும் கோயில்லதான் தங்கியிருப்போம். தினமும் காலையில கடற்கரையிலயும், நாழிக்கிணறுலயும் குளிச்சுட்டு பஜனையைத் தொடங்கிடுவோம். கந்த சஷ்டி கவசம், கந்தகுருகவசம் மற்றும் முருகப் பெருமானின் பக்திப்பாடல்களைத் தாளம் போட்டுக் கொண்டே பாடி வருவோம். சஷ்டி விரதத்தின் முக்கிய பலனே குழந்தை வரம்தான். சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதைத்தான் ’சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’  என்றும், இதில், சட்டி என்றால் ‘சஷ்டி’ விரதத்தையும் அகப்பை என்றால் ‘கருப்பையில் குழந்தை’ என்றும் பொருள் சொல்கிறார்கள். இங்கு அகப்பை என்பதை கருப்பை என மட்டும் பொருளாக சொல்லக்கூடாது. மனதுக்கும் ’அகம்’ என பொருள் உண்டு என்பதால், மனதளவில் ஏற்படும் குழப்பத்துக்கும் இந்த சஷ்டி விரதம் பலனளிக்கும்’’ என்றனர்.

சஷ்டி விரதமிருக்கும் பக்தர்களின் பஜனைப்பாடல்கள் திருச்செந்தூரில் எதிரொலித்து வருவதோடு  மெய்சிலிர்க்கவும் வைக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க