வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (22/10/2017)

கடைசி தொடர்பு:09:55 (23/10/2017)

’கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்’

 

"2017-2018 ம் ஆண்டுக்கான கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 24-ம் தேதி கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற இருக்கிறது" என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கரூர் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் சார்பாக கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 24.10.2017 அன்று காலை 8.30 மணிக்கு கரூர் விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்ததாவது, "கை,கால் ஊனமுற்ற ஆண்கள், பெண்களுக்கு இறகுப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியும், டேபிள் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டி, பார்வையற்ற ஆண்கள்,  பெண்களுக்கு கையுந்து போட்டியும், மனநலம் குன்றியவர்களுக்கு எறிபந்து போட்டியும், காது கேளாதோருக்கு கபடிப் போட்டியும் நடைபெற உள்ளது.

தடகளப் போட்டியில் கை, கால்களில் குறைபாடுகள் உள்ள இருபாலருக்கும் 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும் மற்றும் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம்,100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் சாப்ட் பந்து எறிதல் போட்டியும் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், சாப்ட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டியும் மற்றும் காது கேளாதோருக்கு 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. போட்டியில் வெற்றிபெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டிகளில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளலாம். எனவே, கரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகள் அதிக அளவில் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.