குப்பை சூழ் அரசுப் பள்ளி: டெங்கு பயத்தில் மாணவர்கள்!

 

'கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள பிள்ளாபாளையத்தில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியைச் சுற்றி எங்கும் குப்பைகள் நிரம்பிக் கிடக்கின்றன. இதனால்,டெங்குக் கொசுக்கள் தடையற வளர்ந்து கொண்டிருக்கின்றன.  கூடவே, பள்ளியை ஒட்டி அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு டெங்கு பயமும், குடிமகன்களினால் ஏற்படும் பயமும் அதிகரித்துள்ளது' என்று புலம்புகிறார்கள் கிராம மக்கள்.
                   

 மேலும், இதுபற்றி நம்மிடம் பேசிய அந்தக் கிராம மக்கள், "பிள்ளபாளையத்தில் இரண்டாயிரம் மக்கள் வசிக்கிறாங்க. எல்லோரும் அன்றாடம் கூலி வேலை பார்த்துதான் வாழ்ந்து வர்றோம். இந்தக் கிராமத்தில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறோம். ஆனால், அந்தப் பள்ளியைச் சுற்றி குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கு. அங்கே இருக்கும் குப்பைத் தொட்டிகள் நிரம்பி பல மாசம் ஆய்டுச்சு. அதை அள்ளவே இல்லை. அதேபோல், பள்ளிக்கூடம் அருகே உள்ள குடிதண்ணீர் டேங் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கு. அங்கே தண்ணீரும் தேங்கி, டெங்குக் கொசுக்கள் ஆயிரக்கணக்கில் பெருகிக் கொண்டிருக்கின்றன.

மாணவர்கள் புழங்கும் இடங்களில் குப்பைகள் எக்கச்சக்கமாக குவிந்து கிடக்கின்றன. அதனால் கொசுக்கள் பெருகி, மாணவர்களுக்கு மர்மக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது. பலருக்கும் டெங்குக் காய்ச்சல் அறிகுறிகள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. இந்தப் பள்ளியைச் சுற்றி எந்தவித டெங்கு ஒழிப்பு நடவடிக்கையையும் மருத்துவத்துறை எடுக்கலை. அதேபோல், அந்தப் பள்ளிகூடம் அருகேயே மதுபானக்கடை இயங்கி வருது. தினமும் ஏகப்பட்ட குடிமகன்கள் அங்கே குடிச்சுட்டு, அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளில் சரிஞ்சு படுத்து கிடக்கிறாங்க. அவங்களுக்கும் டெங்கு பரவ வாய்ப்பிருக்கு. அதனால், உடனே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு குப்பைகளை அள்ள உடனே நடவடிக்கை எடுக்கணும். இந்த மதுக்கடையையும் உடனே இழுத்து மூடணும். மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருக்கா என்று மருத்துவ முகாம் நடத்தி கண்டறிந்து, போர்க்கால அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிக்கணும். இல்லையென்றால், மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்" என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!