'அட்டாக் பி.ஜே.பி!' ஸ்டாலினின் 'Plan B' | Stalin's plan in upcoming Statewide rally

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (22/10/2017)

கடைசி தொடர்பு:19:16 (23/10/2017)

'அட்டாக் பி.ஜே.பி!' ஸ்டாலினின் 'Plan B'

ஸ்டாலின்

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசை விட அதற்கு முட்டுக்கொடுத்துவரும் பி.ஜே.பி-யை எதிர்த்து அரசியல் செய்யும் முடிவுக்கு ஸ்டாலின் வந்துவிட்டார். அவரின் பயணத்திட்டத்தின் மாஸ்டர் பிளானே இதுதான்” என்கிறார்கள் தி.மு.க-வினர்.

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அடுத்த மாதம் முதல் நமக்கு நாமே போன்ற பயணம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.  தமிழக மக்களை சந்திக்கும் எழுச்சிப் பயணமாக இந்தப் பயணத்தைக் கொண்டுசெல்லும் நோக்கில் இந்தப் பயணத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயணத்திட்டம் குறித்து தி.மு.க-வுக்கு நெருக்கமான சிலரிடம் கேட்டபோது “அ.தி.மு.க ஆட்சியே ஆட்டம் கண்டுவருகிறது. பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட நிலையிலும் ஆட்சியில் அந்தக் கட்சி நீடிப்பது தி.மு.க-வினருக்கு ஒரு விதத்தில் எரிச்சலையும் ஏற்படுத்திவருகிறது. ஆனால், இந்த ஆட்சியை எப்படியும் இன்னும் சில ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவது ஸ்டாலினுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதனால்தான் அரசுக்கு எதிராக அவர் கருத்துகளை வெளியிடும்போதெல்லாம் மக்களை சந்தித்து முறையிடுவேன் என்று தொடர்ச்சியாக சொல்லிவந்தார். அதன் வெளிப்பாடு இந்தப் பயணத்திட்டம்” என்கிறார்கள். நான்கு மாதத்துக்கு முன்பே ஸ்டாலின் மருமகன் சபரீசன், நமக்கு நாமே போன்று ஒரு பயணத்தை ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மேற்கொண்டால் எப்படி இருக்கும் என்று தொழில் நுட்பக் குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்பிறகுதான் பயணத்திட்டம் பற்றி பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வழுப்பெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலே ஸ்டாலினுக்காக  பணியாற்றிய ஓ.எம்.ஜி. குழுதான் இப்போது ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள பயணத்திட்டத்தையும் உருவாக்க உள்ளது. 

நமக்கு நாமே பயணம் முழுவதுமே ஜெயலலிதாவின் ஆட்சியின் அவலங்களை சுட்டிகாட்டுவது போலவும், அனைத்து தரப்பு மக்களின் குறைகளை கேட்பது போன்று அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது மேற்கொள்ள உள்ள எழுச்சிப் பயணம் நமக்கு நாமே பயணத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க ஆட்சியை விமர்சிப்பதை இந்த ஆட்சியை காப்பாற்றத் துடிக்கும் மத்திய பி்.ஜே.பி அரசின் மறைமுகத் திட்டத்தை மக்களிடம் கொண்டுசெல்லும் விதத்திலே ஸ்டாலினின் இந்தப் பயணம் இருக்கப்போகிறது. வாரத்துக்கு மூன்று நாள்கள் என்று பயணத்திட்டத்தின் கால அளவு நிர்ணயம் செய்யப்பட உள்ளது. பத்து மாவட்டங்களை ஒரு மண்டலமாக உருவாக்கி பயணம் செய்யும் மூன்று நாள்களில் அந்தப் பத்து மாவட்டங்களிலும் ஸ்டாலின் பயணம் செய்ய உள்ளார். 

ஸ்டாலின்

நமக்கு நாமே போன்று  மக்கள் சந்திப்பு இல்லை. மாறாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் பிரச்னைக்குரிய விஷயங்களை மட்டும் ஸ்டாலின் நேரடியாக கள ஆய்வுசெய்யும் விதத்தில் இந்தப் பயண திட்டம் உருவாக்கப்பட உள்ளது. மூன்று நாள்கள் பயணத்தின் முடிவில் அந்த மண்டலத்துக்கு உட்பட்ட முக்கிய நகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளார்கள். இந்தப் பொதுக்கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர்களை பேச வைக்க உள்ளார்கள். இந்தப் பொதுக்கூட்டத்தில்தான் பி.ஜே.பி தமிழக ஆட்சியில் எந்த அளவு ஆளுமை செலுத்தி வருகிறது என்ற மக்களிடம் கருத்துகளைக் கொண்டுசெல்ல உள்ளார்கள். 

தற்போது தி.மு.க-வுக்கு பாராளுமன்றத்தி்ல் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதால் தமிழகத்தில் நடைபெறும்  ஆட்சியின் தவறுகளை பாராளுமன்றத்தில் எடுத்துச் சொல்வதில் சிரமம் ஏற்பட்டுவருவதை ஸ்டாலின் உணர்ந்துள்ளார். இதனால் அகில இந்திய அளவில் வழுவான ஒரு அணியை உருவாக்க, அதன்மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற மாஸ்டர் பிளான்தான் அகில இந்தியத் தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்க முடிவாகியுள்ளது. தி.மு.க நடத்தப்போகும் இந்த மண்டல அளவிலான பொதுக்கூட்டத்துக்கு மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சுரி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரப்பிலும் ஓ.கே. சொல்லப்பட்டுள்ளதால் உற்சாகமாக எழுச்சிப் பயணத்திட்டத்துக்குத் தயாராகிவிட்டது தி.மு.க. 

இந்தப் பயணத்திட்டத்தில் மறைமுக நோக்கமே “மக்களிடம் தமிழக ஆட்சியைப் பற்றி விமர்சிக்கவும், பி.ஜே.பி அரசுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலில் பலமான ஒரு அணியை கட்டமைப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்” என்கிறார்கள்  ஓ.எம்.ஜி. குரூப்பில் உள்ளவர்கள். 

தேர்தல்களில் எப்போதும் அ.தி.மு.கவை அட்டாக் செய்வதுதான் திமுகவின் பிளானாக இருக்கும். ஆனால், இந்த முறை அ.தி.மு.க தலைமையே பலவீனமாக இருப்பதாலும், அதைப் பின்னிருந்து இயக்குவது பி.ஜே.பி. என்று அனைவரும் உணர்ந்திருப்பதாலும், பி.ஜே.பியை வலுவாக எதிர்க்கலாம் என்று தி.மு.க. வியூகம் வகுத்திருக்கிறது. இதன்மூலம் பி.ஜே.பிக்கு எதிராக நிலவும் வெறுப்பையும் தி.மு.க. மொத்தமாக அறுவடை செய்யலாம் என்பது அவர்களின் ’பிளான் பி’யாக இருக்கிறது!


டிரெண்டிங் @ விகடன்