வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (22/10/2017)

கடைசி தொடர்பு:07:46 (23/10/2017)

குப்பைக் காட்டில் இருந்து மீண்டு வரும் கோவை முத்தண்ணன் குளம்!

கோவை குளம்

கோவையில் பரபரப்பான ஆர்.எஸ்.புரத்துக்கு அருகே உள்ளது முத்தண்ணன் குளம். வருடத்தில் 365 நாள்களுமே இந்தக் குளத்தில் நீர் இருக்கும். ஆனால், அந்த நீரை குடிப்பதற்கோ மற்ற பயன்பாடுகளுக்கோ பயன்படுத்த முடியாது. காரணம் அந்த நீரில் உள்ள கழிவுகள். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் குடிப்பதற்கு தகுதியற்றது என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கோவையில் உள்ள குளங்களைச் சுத்தப்படுத்தி புத்துயிர் கொடுத்துவரும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் முத்தண்ணன் குளத்தை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்பினரின் களப்பணியால், கோவையில் ஏற்கெனவே பல்வேறு குளங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. தொடர்ந்து 37 வாரங்களாக, குளங்களை சுத்தப்படுத்தும் களப்பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, 37-வது வாரமான இன்று முத்தண்ணன் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா. மணிகண்டன் கூறுகையில், "இந்தக் குளத்தில் எப்போதுமே தண்ணீர் இருக்கும். ஆனால், தற்போது இதன் நிலத்தடியில் தண்ணீர் இல்லை என்று தெரியவந்துள்ளது. காரணம் இந்தக் குளத்தில் உள்ள குப்பைகள். பிளாஸ்டிக் குப்பைகள், பூஜைக் கழிவுகள் என்று அனைத்தும் சேர்ந்து, குளத்தின் தன்மையை மாற்றிவிட்டன. அதிகளவிலான குப்பைகளால், சகதிகள் சேர்ந்துவிட்டன. அள்ள, அள்ள குப்பைகள் வந்துகொண்டே இருக்கின்றன. தொடர்ந்து மூன்றாவது வாரமாக இந்தக் குளத்தை தூய்மைப்படுத்தி வருகிறோம். இதுவரை 15 டன்னுக்கு மேற்பட்ட குப்பைகளை இந்தக் குளத்தில் இருந்து அகற்றியுள்ளோம். இன்றைய களப்பணியில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இன்றைய தினம் 5 டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டன" என்றார்.