பேரறிவாளனுக்குப் பரோல் அனுமதியை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு, தமிழக அரசு அண்மையில் ஒரு மாத காலம் பரோல் என்னும் சிறைவிடுப்பு அளித்தது. பின்னர், பேரறிவாளன் அவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு அளித்துள்ளது. அவரது தந்தையின் உடல்நலம் பாதிப்படைந்துள்ள நிலையில், அவரைக் கவனிக்க வேண்டிய தேவையின் அடிப்படையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்றுதான், தமிழக அரசு அவருக்கு பரோல் அளித்தது. இந்நிலையில், பேரறிவாளனுக்கான பரோலை மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். 

திருமாவளவதன்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தற்போது, பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் அனுமதிக்கான கால அளவு முடிவுறும்  நிலையை எட்டியுள்ளது. ஆனால், அவரது தந்தையின் உடல்நலம் இன்னும் தேறவில்லை. சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவ்வப்போது அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்குரிய பணிவிடைகளைச் செய்வதற்கு மேலும் சில மாதங்கள் பேரறிவாளன் உடனிருக்க வேண்டிய தேவை உள்ளது. அத்துடன், அவரும் தனது உடல்நலத்தையும் பாதுகாத்திட உரிய சிகிச்சைப் பெற வேண்டியுள்ளது. 

எனவே, தமிழக முதல்வர், பேரறிவாளனின் உடல்நலத்தையும் அவரது தந்தையின் உடல்நலத்தையும் கருத்தில்கொண்டு மேலும் ஆறு மாத காலத்துக்குப் பரோல் அனுமதியை நீட்டித்து ஆணையிட வேண்டுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

கடந்த இரண்டு மாத கால பரோல் அனுமதியின்போது பேரறிவாளனின் நடத்தையானது அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததேயாகும். எனவே, தமிழக அரசு அவரது நன்னடத்தையையும் கருத்தில்கொண்டு அவரது பரோல் காலத்தை இன்னும் ஆறு மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டுமாறு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!