கோவில்பட்டியில் 'மெர்சல்' படம் வெளியான தியேட்டரை பா.ஜ.க-வினர் முற்றுகையிட்டனர் | The siege of the BJP in Mersal film theatre in Kovilpatti

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (23/10/2017)

கடைசி தொடர்பு:08:19 (23/10/2017)

கோவில்பட்டியில் 'மெர்சல்' படம் வெளியான தியேட்டரை பா.ஜ.க-வினர் முற்றுகையிட்டனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வெளியான தியேட்டர் முன்பு, பா.ஜ.க. இளைஞர் அணியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

mersal flim release theater  seiege in kovilpatti by bjp

'மெர்சல்'  திரைப்படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அக்காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும், இத்திரைப்படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்துவிட்டு அரசுக்கு குறைவாக கணக்கு காட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டி, கோவில்பட்டி சண்முகா தியேட்டர் முன்பு  நகர பா.ஜ.க. இளைஞர் அணியினர் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 

bjp seiege in kovilpatti

இதுகுறித்துப் பேசிய மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணித் தலைவர் மாரிச்செல்வம், ‘’நடிகர் விஜய் நடித்து வெளியான 'மெர்சல்' படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறித்தும், பிரதமர் மோடி அறிவித்துள்ள டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி குறித்த வசனங்கள் விஜய்யின் தவறான புரிதலை எடுத்துரைக்கிறது. இந்தப் படத்தின் டிக்கெட், நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு தியேட்டர்களில் விற்கப்படுகிறதா... இதற்கு விஜய் நடவடிக்கை எடுப்பாரா... அவர் படத்தில் நடிப்பதற்கு வாங்கும் சம்பள பணத்துக்கு முறையாக வரி கட்டுகிறாரா? என்பதற்கெல்லாம் அவர் பதில் சொல்ல வேண்டும். தன் சுய விளம்பரத்துக்காக இப்படிப் பொய்யான கருத்துகளைத் திரைப்படத்தின்மூலம் மக்கள் மனதில் பதியவைக்கும் அவரது செயலைக் கண்டிக்கிறோம். சர்ச்சையாக இடம்பெற்றுள்ள 4 காட்சிகளை இப்படத்திலிருந்து உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தியேட்டர் முன்பு கூடி நின்று, தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க-வினர் கோஷங்களை எழுப்பினர். போலீஸார்  அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலையச் செய்தனர். பா.ஜ.க-வினரின் முற்றுகைப் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கலைந்துசென்ற பின்பே படம் பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க