கன்னியாகுமரியில் தொடர் மழை; நிரம்பும் அணைகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. குமரியின் மேற்கு மாவட்டத்திலும் மலையோர கிராமங்களிலும் அதிக மழை பெய்துவருகிறது. பாலமோரில் 112.8 மி.மீ மழை பெய்துள்ளது. புத்தன் அணை, திற்பரப்பு, முள்ளங்கினாவிளை, சுருளோடு, அடையாமடை, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடக்கம் முதல் பொய்த்துவிட்ட நிலையில், வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்தது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக சாரல் மழை பெய்துவருகிறது. மலையோரப் பகுதிகளிலும், அணைகளின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் மழை கணிசமான அளவு பெய்துவருகிறது. இதனால் குமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
மழையின் காரணமாக, திற்பரப்பு அருவியிலும் நீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,818 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 20.60 அடியாக உள்ளது. பாசனத்துக்காக அணையிலிருந்து 604 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 50.30 அடியாக உயர்ந்துள்ளது. விநாடிக்கு 1,227 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து 279 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.18 அடி கொள்ளளவுகொண்ட சிற்றாறு அணைகளின் நீர் மட்டம், இன்று காலை 7 அடியை எட்டியது. அணைகளிலி ருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் விடப்பட்டுள்ளதால், பாசனக் குளங்கள் வேகமாக நிரம்பிவருகின்றன. அதனால், விவசாயிகள் சாகுபடிப் பணியில் தீவிரமாக இருக்கிறார்கள்.