வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (23/10/2017)

கடைசி தொடர்பு:11:32 (23/10/2017)

’இரண்டு நாள்களில் இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும்’: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

"இன்னும் இரண்டு நாள்களில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்” என திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில் அருகே, நேற்றிரவு அ.தி.மு.க-வின் 46-ம் ஆண்டு துவக்க நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. உறையூர் பகுதி கழகச் செயலாளர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில், அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன், அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சரும் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெல்லமண்டி நடராஜன்

விழா மேடையில் அமைச்சர் பேசுகையில், “இன்னும் இரண்டு நாளில், இரட்டை இலை சின்னம் நமக்குத்தான் என்கிற அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும், வானத்தில் இருந்துகொண்டு நம்மை வழிநடத்துகிறார்கள். அவர்களின் ஆன்மா சும்மா இருக்காது. எதிரிகளைக் காலிசெய்துவிடுவார்கள். இழந்த இரட்டை இலை சின்னம் மீண்டும் வரும். வரும் 26-ம் தேதி திருச்சியில் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும். இழந்த சின்னத்தை நாம் மீட்ட நிகழ்ச்சியாக நடக்க இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இன்னும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி இருக்கும் என்றார். அது நிச்சயம் நடக்கும்" என முடித்தார்.

இதேபோல, நேற்று முன்தினம் மணப்பாறையில் நடந்த அ.தி.மு.க-வின் 46-ம் ஆண்டு துவக்க நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் வளர்மதி, “ஜெயலலிதா படத்தைப் போடவே மறுத்த ஒருவர், இப்போது அடுத்தடுத்து நிர்வாகிகளைப் பொதுச்செயலாளரின் ஆணைக்கிணங்க நீக்கியதாகத் தெரிவித்துவருகிறார் என்றால், அவர் நாள்தோறும் பொதுச் செயலாளரை  சந்திக்கிறாரா? நான் ஒரு வழக்குரைஞர், எனக்குச் சட்டம் நன்றாகத் தெரியும். சிறைச்சாலையில் நாள்தோறும் ஒரு குற்றவாளியை சந்திக்க முடியாது. ஆனால் தினகரன், தினம் தினம் நிர்வாகிகளை நீக்கும்போது இப்படித் தெரிவிக்கிறார். எங்களை நீக்குவதற்குக் கழகத்தின் உறுப்பினர்கூட இல்லாத தினகரனுக்கு என்ன தகுதி இருக்கு? இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று கூறியதுடன், ஆட்சியை அகற்றிவிடுவேன் என்றும் கூறி வருபவரைத் தமிழக மக்கள் ஓட ஓட விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க