போலீஸ் செய்த கந்துவட்டி பஞ்சாயத்து... 2 குழந்தைகளுடன் பெற்றோர் தீக்குளிப்பு... கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி | Family including two kids attempts suicide infront of Nellai collector office

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (23/10/2017)

கடைசி தொடர்பு:12:23 (23/10/2017)

போலீஸ் செய்த கந்துவட்டி பஞ்சாயத்து... 2 குழந்தைகளுடன் பெற்றோர் தீக்குளிப்பு... கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி

கந்துவட்டிக் கொடுமையால், கலெக்டர் அலுவலகத்தில் பச்சிளம் குழந்தைகளுடன் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தனர். பலத்த காயங்களுடன் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர், இசக்கிமுத்து. கூலி வேலை செய்துவருகிறார். அவர் மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு மதி சரண்யா என்ற 5 வயது குழந்தையும் அட்சய பரணிகா என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனர். இவர்கள், குடும்பத் தேவைக்காக காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் 1.50 லட்சம் பணம் கடனாக வாங்கியுள்ளார். 

அந்தப் பணத்துக்காக இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வட்டியாக மட்டும் கட்டியுள்ளார். மொத்தப் பணத்தையும் திருப்பிக் கொடுக்குமாறு முத்துலட்சுமியும் அவர் குடும்பத்தினரும் இசக்கிமுத்துவை மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக, அச்சன்புதூர் காவல்நிலையத்தில் இசக்கிமுத்து புகார் செய்தார். ஆனால், போலீஸார் கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன், பணத்தைக் கொடுக்குமாறு நெருக்கடிகொடுத்தனர்.

போலீஸாரும் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டதால், இசக்கிமுத்துவும் அவர் மனைவியும் மனம் உடைந்தனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் 5 முறை மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மனம் நொந்துபோன இசக்கிமுத்து, இன்று மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். ஏற்கெனவே, பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத அதிருப்தியில், அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவுசெய்தார்.

அதையடுத்து அனைவரும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டனர். குழந்தைகள் தீயின் கடுமை தாங்காமல் அங்கும் இங்கும் ஓடி பரிதவித்தது காண்போரைக் கண்கலங்க வைத்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடல் முழுவதும் கருகிய நிலையில் ஆபத்தான நிலையில் 4 பேரும் சிகிச்சைபெற்று வருகிறார்கள். 

இதனிடையே, இசக்கிமுத்துவின் சகோதரர் கோபி, தனது அண்ணனின் குடும்பத்தின் நிலையைக்கண்டு வேதனை அடைந்தார். இதனால் மருத்துவமனையில் இருந்த ஜன்னலில் தலையை வேகமாக முட்டினார். உடல் முழுவதும் ரத்தம் வடிந்தது. பலத்த காயம் அடைந்த கோபியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.