“கடைகடையா காசு வாங்கிட்டிருந்த நான் மீண்ட கதை!” அனுபவம் பகிரும் ‘திருநங்கை’ மைதிலி #EmpoweringStory

ரு காலத்தில், கடை கடையாகப் பணம் வசூலித்து தனது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தவர் திருநங்கை மைதிலி கூடலூரில் இன்று, சுமார் 50 மாணவர்களுக்குப் பரதநாட்டியம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக உயர்ந்துள்ளார். ஒரு திருநங்கைக்கு இந்த சமூகம் கொடுக்கும் அனைத்து இன்னல்களையும் கடந்து இன்று ஒரு நடன ஆசிரியையாக பரிமாணம் எடுத்துள்ளார். அவரது கரடுமுரடான வாழ்க்கைப் பயணம் குறித்து நம்மிடையே பேசத் தொடங்கினார்.

திருநங்கை மைதிலி

''என் சொந்த ஊர் கேரளாவின் பாலக்காடு. நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே அங்கதான். கண்டிப்பான அப்பா, பாசம் காட்டும் அம்மா, அன்பில் திக்குமுக்காடவைக்கும் அக்கா, அண்ணன் என மகிழ்ச்சியா வாழ்க்கை நகர்ந்துட்டு இருந்துச்சு. நான் திருநங்கையா மாறும் வரைக்கும் அதெல்லாம். பிறப்பில் ஆணாக இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே பெண்கள் சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு இருந்துச்சு. ஏழு வயசுலேயே பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். பத்தாவது படிக்கும்போதே பலருக்கு நடனம் கற்பிக்க ஆரம்பிச்சேன். இந்தச் சூழ்நிலையில் நான் திருநங்கை என்பதை முழுமையாக உணர்ந்தேன். வீட்டுக்குத் தெரியக்கூடாதுனு மறைச்சு, மறைச்சு வாழ்ந்துட்டிருந்தேன். ஒருகட்டத்தில் எல்லாருக்கும் தெரிஞ்சுப்போச்சு. வீட்டை விட்டே துரத்திட்டாங்க. பரதநாட்டியத்தில் வாங்கின சான்றிதழ்கள், வேறு முக்கியமான சான்றிதழ்கள் என எதையும் எடுத்துக்க விடாமல் துரத்திட்டாங்க என்று வருந்தியவரைத் தேற்றி தொடர்ந்து பேசினோம்.

"இருபது வயசுல வெறும் கையோடு அநாதையா தெருவில் நின்னேன். ஒவ்வொரு ஊராகப் பயணிக்க ஆரம்பிச்சேன். பசிக்கும் வயித்துக்கு ஏதாவது போட்டாகுனுமே? கடை கடையா காசு வசூல் பண்ண ஆரம்பிச்சேன். எல்லாரும் கேவலமா, அசிங்கமா பேசுவாங்க. எல்லா அவமானத்தையும் துடைச்சுக்கிட்டு பிழைச்சுட்டிருந்தேன். அப்படித்தான் கூடலூருக்கு வந்தேன். ஒவ்வொரு கடையாகப் போய் காசு கேட்கும்போதுதான், தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்த ஜூலியைச் சந்தித்தேன். அவங்க கடைக்குப் போனபோது என்னைப் பற்றி விசாரிச்சாங்க. எனக்குப் பரதநாட்டியம் தெரியும்னு சொன்னதும், 'நீங்க ஏன் பரதம் கற்றுக்கொடுக்கலாமே'னு கேட்டாங்க. 'எனக்கு 33 வயசாகிப்போச்சு. பரதத்தை விட்டுப் பல வருஷமாச்சு. இப்போ முடியுமா?'னு தயங்கினேன். ஆனால், அவங்க ஊக்கப்படுத்தினாங்க. மறுபடியும் எனக்குப் பிடிச்ச பரதக்கலையை அவங்களுக்காக ஆட ஆரம்பிச்சேன். நம்முடைய மனசுக்கு நெருக்கமாகி நாம கத்துக்கிட்ட எந்த ஒரு கலையும் எப்பவும் நம்மைவிட்டு பிரியாதுங்குறதை இப்போ தெரிஞ்சிகிட்டேன். நான் கத்துக்கிட்ட எல்லா பாவனைகளையும் ஆட ஆரம்பிச்சேன். எதையுமே நான் மறக்கல" என்றவர் பரதம் மட்டுமல்லாமல் மோகினி ஆட்டம், குச்சுபுடி, கதகளி, ஒடிசி ஆகிய நடனங்களையும் முறையாகக் கற்றுள்ளாராம்.

திருநங்கை மைதிலி

கூடலூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினேன். அதைப் பார்த்துட்டு நிறைய பேர் அவங்களுக்கும் சொல்லிக்கொடுக்க கேட்டாங்க. இப்போ, சுமார் 50 பேருக்குச் சொல்லிக் கொடுக்கறேன். இன்னும் நிறையப் பேருக்கு சொல்லிக்கொடுத்து உயர்த்துவேன். என் வழிகாட்டியா இருந்த ஜூலி, என்னோடு சேர்த்து நிறைய திருநங்கைகளின் வாழ்க்கைக்கு உதவிகள் செய்றாங்க. எங்களை, கேவலமா பார்க்கிறவங்க மத்தியில், திறமையை அடையாளம் கண்டுப்பிடிச்சு வெளிக்கொண்டு வந்து, இந்தச் சமூகத்தில் கெளரவமாக வாழ வழி செய்த தோழி ஜூலிக்கு நன்றி சொல்லிக்கிறேன். திருநங்கைகளும் உங்களைப் போன்றவர்கள் தான்.. அவர்களுக்கும் பசி, துக்கம், மகிழ்ச்சி, ஆசை எல்லாம் '' எனக் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் மைதிலி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!