வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (23/10/2017)

கடைசி தொடர்பு:15:30 (23/10/2017)

ஓட்டுநரைக் காறித்துப்பிய போலீஸ்; கொந்தளித்த ஜல்லிக்கட்டு வீரர்கள்! நள்ளிரவில் அதிர்ந்த பெரம்பலூர்

ஜல்லிக்கட்டுக் காளைகளை ஏற்றிவந்த டிரைவர்களிடம் மாமூல் வாங்கியது மட்டுமல்லாமல், டிரைவர்கள்மீது போலீஸார் காறித் துப்பிய சம்பவத்தைக் கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தை  நடத்தினார்கள் ஜல்லிக்கட்டு வீரர்கள். இதனால், பெரம்பலூர் மாவட்டமே போர்க்களம்போல ஆனது.

                                          

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், கொம்மேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று நடைபெற்றது. இதையொட்டி புள்ளம்பாடி, டால்மியாபுரம், லால்குடி மற்றும் திருச்சி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை எனப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளை  ஆட்டோவில் ஏற்றிவந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வந்தபோது, குன்னம் காவல்துறையினர் லோடு ஆட்டோவை நிறுத்தி, 'ஓவர் லோடு ஏற்றிவந்தது மட்டுமல்லாமல் காளைகளை இந்த வண்டியில் ஏற்றிவரக்கூடாதுனு தெரியாதா' என்று திட்டியதோடு, ஒரு வண்டிக்கு 250 ரூபாய் வீதம் வாங்கியிருக்கிறார்கள்.

                           

பிறகு, ஜெயங்கொண்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி முடிந்த பிறகு, காளைகளை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு குன்னம் பகுதியில் வந்தபோது, மீண்டும் காவலர்கள் மடக்கி, எல்லா வண்டிகளுக்கும் அபராதம் விதித்துள்ளனர். கடுப்பான இளைஞர்கள் ஒன்று திரண்டு காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிப்போய், காவலர் ஒருவர் 'குடிகார நாய் நீ, என்னிடமே எதிர்த்துப் பேசுறியா' என்று டிரைவர்மீது காறித் துப்பியிருக்கிறார். கடுப்பான டிரைவர்கள், காவலர்களை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியதும், நீங்கள் குடிபோதையில் வண்டி ஓட்டினீர்கள் என்று அவர்களது டிரைவிங் லைசென்ஸைப் பிடிங்கி வைத்துக்கொண்டு அசிங்கமாகத் திட்டியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜல்லிக்கட்டு மாடு உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஒன்றுதிரண்டு காவல்துறையைக் கண்டித்து பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை என நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் மாடுகளை ரோட்டில் அவிழ்த்துவிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

                                    

இந்தச் சாலை மறியலால், மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் காவல்துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பறிமுதல் செய்யபட்ட டிரைவிங் லைசென்ஸைத்  திருப்பிக்கொடுத்த பிறகே, போராட்டம் முடிவுபெற்றது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், 'ஹைவே ரோந்துக் காவலர்கள், குன்னம் சாலையில் நின்றுகொண்டு கட்டாய வசூல்செய்கிறார்கள்' என்று பொது மக்களே மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.