வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (23/10/2017)

கடைசி தொடர்பு:15:17 (23/10/2017)

“தெருநாய் மீதான அக்கறைகூட எங்கள்மீது இல்லையா?” - குமுறும் துப்புரவுப் பணியாளர்கள்

துப்புரவுப் பணியாளர்கள்

“இங்க இருக்கிறவங்களையெல்லாம் மனுஷங்கன்னு நெனைச்சிடாதீங்க சார்... நாங்களெல்லாம் தெரு நாயை விடவும் கேவலமானவங்க.!? இந்த பாழாப்போன வாழ்க்கையை வாழ்றதுக்காக தினம்தினம் செத்துக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு மனுஷங்களுக்கு உண்டான மரியாதைய மட்டுமல்ல, எங்க உழைப்புக்கு உண்டான ஊதியத்தையும் யாரும் கொடுப்பதில்லை. வாழறப்போ பாவம் செஞ்சா, செத்த பிறகு நரகத்துக்கு போவோம்னு சொல்வாங்க. ஆனால், எந்தப் பாவமும் செய்யாமலேயே நாங்க நரகத்துலதான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம்” - கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில், அவர்களுக்கு மத்தியில் ஒரு பெண் துப்புரவுப் பணியாளர் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் கடந்த மூன்று நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததுடன், இவர்களை மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. துப்புரவுப் பணியாளர்களும் நம்மைப்போன்ற சக மனிதர்கள்தான். அவர்களுக்கு எல்லா உணர்வுகளும் இருக்கிறது. தன்மானத்தை உதறித் தள்ளிவிட்டு, ‘நாங்கள் தெருநாயை விடவும் கேவலமானவர்கள்’ என்று சொல்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அவர்கள் மோசமாக நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது. அந்தப் பணியாளர்கள், எவ்வளவு துயரத்தில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்? 

"எங்க வாழ்க்கையை ஒரு மணி நேரம் நீங்க வாழ்ந்துட்டீங்கன்னா, நாங்க மொத்தப் பேரும் இங்கயே செத்துடுறோம் சார்... " என்ற முருகேசனின் குரலில் அவர்கள் வாழ்க்கையை இன்னும் நெருக்கமாக உணரமுடிகிறது.

பதினைந்து வருடங்களாக மாநகராட்சியின் குப்பை லாரி டிரைவராக இருக்கிறார் முருகேசன். வாழ்க்கையின் மீதான அதிருப்தி அவர் வார்த்தைகளில் நிரம்பி வழிகிறது. "நாமெல்லாம் எதுக்கு மனுஷனா பிறந்தோம்னு இருக்கு. நீங்க பெத்த பிள்ளையோட மலத்தைக்கூட உங்க கையால அள்ள மாட்டீங்க. ஆனா, நாங்க யார் யாரோட கழிவுகளையோ கையால அள்ளுறோம். ஊர் சுத்தமா இருக்கணுங்கிறதுக்காக சாக்கடைக்குள்ள இறங்குற நாங்க நாறுகிறோம். எங்க வாழ்க்கையில் ஒரு வேளைகூட ருசிக்காக சாப்பிட்டதில்ல சார். இப்படி நெறய சொல்லிக்கிட்டே போகலாம். எங்க வேலையோட கஷ்டத்தைப் பத்தியும், அதில் உள்ள வலிகளைப் பத்தியும் நாங்க எவ்வளவோ கத்திட்டோம் சார். 'கக்கூஸ்' படத்துல பாத்திருப்பீங்களே..! ஆனா, யாரும் அதையெல்லாம் உணர்ந்ததா தெரியல. உணரவும் மாட்டாங்க. தலைவலியும், வயித்துவலியும் தனக்கு வந்தாத்தான் தெரியும்பாங்களே அதுபோல, இதையெல்லாம் அனுபவிச்சாதான் சார் தெரியும். அதுகூட இப்ப பிர்சனை இல்லை. எவ்வளவோ கஷ்டங்களைத் தாங்கிக்கிட்டு யாராலயும் செய்யமுடியாத வேலைகளை  செய்றோம். ஆனால், அந்த வேலைக்கான ஊதியத்தைக் கொடுக்காம கொடுமைப்படுத்துறாங்க. அதை நினைச்சாதான் ரொம்ப வலிக்குது சார்..." என்றார் பழனிச்சாமி.

 துப்புரவுப் பணியாளர்கள்துப்புரவுப் பணியாளர்கள்

அவரைத் தொடர்ந்து தன் ஆதங்கத்தைத் தெரிவித்த துப்புரவுப் பணியாளர் ராஜேஷ், "குப்பை அள்ளுகிறவர்களுக்கு ஒரு நாளைக்கு 350 ரூபாயும், லாரி டிரைவர்களுக்கு ஒரு நாளைக்கு 575 ரூபாயும் சம்பளமாக அரசு நிர்ணயம் பண்ணியிருக்கு. ஆனால், குப்பை அள்ளுகிறவங்களுக்கு வெறும் 250 ரூபாயும், டிரைவர்களுக்கு வெறும் 300 ரூபாயும்தான் கொடுக்குறாங்க. தீபாவளிக்கு போனஸ் வேணும்னு போராடுனோம். 3,000 ரூபாய் கொடுக்கிறதா அறிவிச்சாங்க. ஆனால் 500 ரூபாய்தான் கொடுத்தாங்க.  வெறும் 500 ரூபாயை வெச்சுக்கிட்டு நாங்க என்ன பண்ணமுடியும் சொல்லுங்க?  அரசாங்கம் கொடுக்கல சரி. எச்சில் இலை எடுக்கிறதுக்காக ஹோட்டல்லயும், குப்பை எடுக்கிறதுக்காக வீடுகள்லயும் காசு கொடுப்பாங்களேன்னு நீங்க நினைக்கலாம். ஆனால், நாங்க போறதுக்கு முன்னாடியே எங்க சானிட்டரி இன்ஸ்பெக்டர்கள் ஹோட்டல்களுக்குப் போய் கலெக்‌ஷன் பண்ணிடுறாங்க.

எங்கமேல இரக்கப்பட்டு வீடுகள்ல கொடுக்கிற பணத்துல ஒவ்வொருத்தரும் மாசம் 500 ரூபாய் சானிட்டரி இன்ஸ்பெக்டருக்கு கப்பம் கட்டணும். இல்லைன்னா ஒரு வாரத்துக்கு வேலை கொடுக்க மாட்டாங்க. நிரந்தரப் பணியாளர்களைவிட நாங்கதான் அதிகமா வேலை பாக்குறோம். எங்களை அடிமைகள் மாதிரிதான் நடத்துறாங்க. எங்களுக்கு லீவே கிடையாது. தவிர்க்கவே முடியாம நாங்க லீவ் எடுத்தால், அதை கணக்குல காட்ட மாட்டாங்க.  லீவ் நாள் சம்பளத்தை அவங்க எடுத்துப்பாங்க. பி.எஃப். பிடிக்கிறோம்னு சொல்றாங்க ஆனால், அதுக்கான எந்த ஆதாரமும் எங்ககிட்ட இல்லை. ஒரு அடையாள அட்டைகூட எங்களுக்குக் கிடையாது. நாங்க யாருக்கு வேலை பாக்குறோம். எங்க கான்ட்ராக்டர் யாரு? அவரு கருப்பா, சிவப்பான்னு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கான கான்ட்ராக்டர்கள் மாறும்போது பி.எஃப் கணக்கை மாத்துறத்துக்காக ஃபார்ம் நிரப்பித் தரணும்னு சொல்லி அதுக்காக ஆளுக்கு 500 ரூபாய் வாங்கிக்குவாங்க. இப்படி எங்களை என்னென்ன வகையிலயெல்லாம் சுரண்ட முடியுமோ அந்தந்த வகையிலெல்லாம் சுரண்டுறாங்க. நாங்க இதையெல்லாம் யார்கிட்ட சொல்றதுன்னே தெரியல" என்றார் அப்பாவியாக.

இவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, "தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு சட்டப்படி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான ஊதியம், போனஸ் மற்றும் விடுமுறை வழங்கப்படும்" என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், சட்டப்படி எவ்வளவு சம்பளம் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. என்று மறையும் இந்த ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களின் அவலங்கள்...?


டிரெண்டிங் @ விகடன்