வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (23/10/2017)

கடைசி தொடர்பு:13:53 (23/10/2017)

தனது உழைப்பாலும் தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடும் முதல்வரானவர் எடப்பாடி: தினகரன் கலகல

இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷனில் தினகரன் அணியினரும் எடப்பாடி பழனிசாமி அணியினரும் காரசாரமாக வாதங்களை முன்வைத்துவருகின்றனர். இந்நிலையில், டிசம்பருக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி, நவம்பர் மாதத்துக்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் கமிஷன் முடிவு எடுத்துவிடும் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டி.டி.வி.தினகரன்.

தினகரன்

அப்போது அவர், `இரட்டை இலை சின்னம் தொடர்பாக இறுதித் தீர்ப்பு இப்போது வர வாய்ப்பில்லை. அதுவும், எடப்பாடி அணிக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பே இல்லை. தேர்தல் கமிஷனில் ஆவணங்கள் சரிபார்ப்பதற்கு நேரம் ஆகிறதே தவிர, நாங்கள் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கைத் தாமதப்படுத்துகிறோம் என்று சொல்வது சரியில்லை. நீதி வழங்கும் விஷயத்தில் நேரம் நிர்ணயிக்க முடியாது. நவம்பர் 10-ம் தேதிக்குள் முடிவெடுத்தால் அது சரியாக இருக்காது. அப்படி ஏதாவது முடிவெடுக்கப்பட்டால், அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவோம்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், `நாட்டில் எது நடந்தாலும் பரவாயில்லை, நாள்களைக் கடத்த வேண்டும் என்றுதான் தமிழக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என்று எல்லாம் மத்திய அரசிடம் இருப்பதால், அமைச்சர்கள் பயப்படுகிறார்கள். தமிழகத்தின் அரிஸ்டாட்டில் மாண்புமிகு ஜெயக்குமார், பன்னீர்செல்வம் ஆகியோர் சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த ரெய்டுக்குப் பிறகு எப்படிப் பேசுகிறார்கள் என்பதை அனைவரும் பார்த்துதானேவருகின்றனர். எந்த ஒரு உண்மையையும் மறைக்க முடியாது. பொய்யையும் ரொம்ப நாள் சொல்லி ஏமாற்ற முடியாது. சசிகலாதான் ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணம் என்று பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், உண்மை என்னவென்று இன்று மக்களுக்குத் தெரியும்' என்றவர், `தனது உழைப்பாலும் தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர்தான் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி. அவர், சுயம்பாகவே முதல்வரானார்' என்று கிண்டல் செய்யும் தொனியில் பேசியுள்ளார்.