கந்துவட்டி கொடுமையைத் தடுக்க ஹெல்ப் லைன்! நெல்லை கலெக்டர் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க ஹெல்ப் லைன் அமைக்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

கந்துவட்டி தீக்குளிப்பு

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர், இசக்கிமுத்து. இவர் அதே ஊரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதற்காக இதுவரை 2,30,000 ரூபாய் வட்டியாக செலுத்தி விட்டார். தற்போது பணம் செலுத்த முடியாத நிலையில், கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் மிரட்டல் விடுத்தனர். அத்துடன், வீட்டுக்கே வந்து பணம் கேட்டி மிரட்டினர். 

இது தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காவல்துறையினரும் இசக்கி முத்துவை மிரட்டியதால், அவரது மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சய பரணிகா ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில், நால்வரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலெக்டர் சந்தீப் நந்தூரி

பரிதாபமான இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’மாவட்டம் முழுவதும் கந்துவட்டி பிரச்னையை தடுக்க தீவிர நடவடிகை எடுக்கப்படும். இதற்காக வருவாய்த் துறையினர், காவல்துறையினர் ஆகியோர் இணைந்து ஒரு சிறப்புப் படை அமைக்கப்பட்டு கந்து வட்டியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

இனியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு ஹெல்ப் லைன் அமைக்கப்படும். பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் கந்துவட்டி கொடுமை குறித்து இந்த எண்ணில் தெரிவித்தால் உடனடியாக அதனை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையே இல்லாத நிலையை உருவாக்கப்படும்’’ என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!