அவர் ஒரு `சூப்பர் முதலமைச்சர்': ஜெயக்குமாரை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்

'' 'ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கும் போலி வாக்களர்களை நீக்க வேண்டும்' என்று தி.மு.க சார்பில் இன்று தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து, 'ஆர்.கே.நகர் தொகுதியில் 40,000 போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று இடைத்தேர்தலின்போதே தெரிவித்திருந்தோம். அப்போது, மாநிலத் தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்போது தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரடியாகச் சென்று தேர்தல் கமிஷன் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

மு.க.ஸ்டாலின்


பின்னர், நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தீ குளித்தது பற்றி கேள்விகேட்டபோது, `'இப்போது நடந்துகொண்டிருக்கும் குதிரை பேர ஆட்சியில், சட்ட ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டுப்போயிருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் நெல்லை கடையநல்லூரில் நடந்த தீ குளிப்பு சம்பவம். இந்தக் கொடுமை நடக்க யார் பொறுப்பானவர்கள் என்பதைக் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றவர், `ஜெயக்குமார் மீன்வளத்துறை அமைச்சர். ஆனால், அதை அவர் மறந்து, 'சூப்பர் முதலமைச்சராக' செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மீன் வளத்தைப் பற்றியும் அதைச் சார்ந்த மக்களைப் பற்றியும் சிந்திக்க அவருக்கு நேரமில்லை. எனவேதான், இன்று காசிமேட்டில் மீனவ மக்கள் ஜெயக்குமாருக்கு எதிராக போராடினர். ஆனால்,  அற வழியில் போராடியவர்களை  போலீஸைக் கொண்டு ஒடுக்கியுள்ளது இந்த அரசு'' என்று குற்றம் சாட்டினார்.

இறுதியாக, பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு குறித்துக் கேட்டபோது, `'பேரறிவாளனின் உடல்நலத்தைப் கருத்தில்கொண்டும் அவரின் தந்தையின் உடல் நலத்தை கணக்கில் கொண்டும் அவரது பரோலை, தமிழக அரசு நீட்டித்துத் தர வேண்டும்'' என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!