வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (23/10/2017)

கடைசி தொடர்பு:17:04 (23/10/2017)

தமிழிசை - திருமாவளவன் கருத்து எதிரொலி... திசைமாறும் 'மெர்சல்' புயல்!


விஜய்

மெர்சல் திரைப்படம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சொன்ன கருத்துக்கு, மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் பதில் சொல்லியிருக்கிறார். அதுபற்றி இரண்டு தலைவர்களும் மாறிமாறி கருத்துச் சொல்லியிருப்பது அவர்கள் கட்சி தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. அரசியல் மோதல், தனிப்பட்ட மோதலாகி  பிரச்னை பெரிதாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

'மெர்சல்' திரைப்படத்தில் ஜி.எஸ்.டி வரி தொடர்பாக நடிகர் விஜய் பேசியிருக்கும் வசனத்தால், தமிழக பி.ஜே.பி கொந்தளித்திருக்கிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேசியச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததோடு, அந்தப் படத்தில் ஜி.எஸ்.டி தொடர்பாக வரும் காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதே நேரத்தில், நடிகர் விஜய் தெரிவித்துள்ள கருத்துகளை, 'பேச்சுரிமை என்ற அடிப்படையில் ஆதரிக்கிறோம்' என்று எதிர்க் கட்சியினர் சொல்லியிருக்கிறார்கள். 

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ''தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலின் உக்கிரம் இன்னும் குறையவில்லை. அந்தப் பிரச்னையைத் திசை திருப்பவே 'மெர்சல்' பிரச்னையைக் கையில் எடுத்துள்ளார்கள். நான், இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், இப்போது நடக்கும் விமர்சனங்களில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. திரைப்படத் தணிக்கைக் குழுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கமானவர்களே இருப்பார்கள். அப்படி, அவர்கள் முறையாகத் தணிக்கை செய்த பிறகே அப்படம் வெளியாகியிருக்கிறது. எனவேதான், இந்த எதிர்ப்புகளில் உள்நோக்கம் இருக்கிறது என்கிறேன். அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களை வளைத்துப்போட்டு அவர்கள்மூலம் தமிழகத்தில் கால் ஊன்ற பி.ஜே.பி முயற்சி செய்கிறது'' என்று சொல்லியிருந்தார்.

திருமாவளவன்

''நடிகர்களை வளைத்துப்போட பி.ஜே.பி முயற்சி செய்கிறது'' என்ற தொல்.திருமாவளனின் குற்றச்சாட்டு குறித்து சென்னை அண்ணா நகர் பூங்காவில் பி.ஜே.பி சார்பில், நிலவேம்புக் கஷாயம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழிசை சவுந்திரராஜனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''தொல்.திருமாவளவனின் அனுபவம்தான் இப்படி அவரைப் பேசவைக்கிறது. ஏதாவது ஓர் இடத்தை வளைத்துப்போட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்டவர்களை முதலில் மிரட்டுவார்கள். கட்டப்பஞ்சாயத்து செய்து நிலத்தை அபகரிப்பவர்தான் தொல்.திருமாவளவன். அவர், அலுவலகம் உள்ள இடத்திலிருந்து எல்லா இடங்களையுமே வளைத்துதான் போட்டுள்ளார்கள். வளைத்துப்போட்டதில் பழக்கமுடையவர்கள் என்பதால்தான் இன்றைக்கு நடிகர் விஜயை நாங்கள் வளைத்துப்போடுவதாக அவர் நினைக்கிறார். அப்படிச் செய்யவேண்டிய அரசியல் எனக்கில்லை'' என்று தடாலடியாகப் பேசினார்.

இதுகுறித்து தொல்.திருமாவளவனிடம் கேட்டபோது, ''பி.ஜே.பி நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறேன். அதைத் தாங்கிகொள்ள முடியாமல் எரிச்சலடைந்து அவர் இப்படிப் பேசுகிறார். எந்த இடத்திலாவது கட்டப்பஞ்சாயத்து செய்தேன் என்று டாக்டர் தமிழிசையால் சொல்ல முடியுமா... ஓர் ஆதாரத்தைக் காட்ட முடியுமா? கட்சித் தலைமை அலுவலகம் இருக்குமிடம் சுத்த கிரய இடம். பதிவுத் துறையில் அந்த இடம் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைச் சட்டப்படி எதிர்கொள்வோம். நான் வைக்கும் அரசியல் விமர்சனங்களை அரசியல்ரீதியாகப் பதில் சொல்ல முடியாமல் தனிப்பட்ட விமர்சனத்தை, அதுவும் மிகவும் காட்டமான விமர்சனத்தைப் பி.ஜே.பி தலைவர் டாக்டர் தமிழிசை செய்துள்ளார். அதை அவரிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. அதற்காக  அவர் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்காவிட்டாலும் உள்ளுக்குள் வருத்தப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்'' என்றார்.

தமிழிசை

இந்நிலையில், தொலைபேசி மூலமும் சமூக வலைதளங்களிலும் பலரும் தன்னைக் கடுமையாக விமர்சிப்பதாகவும் மிரட்டல் விடுப்பதாகவும் புகார் கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை. இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''தொலைபேசியில் தொடர்புகொண்டு பலரும் மிரட்டுகிறார்கள். சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கிறார்கள். அதைக் கண்டு நான் அஞ்சப்போவதில்லை. 'மெர்சல்' படப் பிரச்னையில் எனது கருத்தையே சொன்னேன்'' என்றார்.  

தலைவர்களின் பேச்சுகள் இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொல்.திருமாவளவன் தனது பேட்டியில், ''இந்தப் பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்று சொல்லியிருந்தார். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவரவர் பகுதியில் போலீஸ் நிலையங்களில் டாக்டர் தமிழிசைக்கு எதிராகப் புகார் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.   

 

பாலாஜி

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜியிடம் பேசினோம். ''அரசியல் விமர்சனங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 'மெர்சல்' படத்தைத் திருட்டு வீடியோவில் பார்த்த ஹெச்.ராஜா குறித்த கேள்விக்கு டாக்டர் தமிழிசை, 'அந்தச் செய்தியைப் பார்க்கவில்லை' என்று திரும்பத்திரும்ப உண்மைக்கு மாறாகப் பேசுகிறார். இதுதான் பி.ஜே.பி-யின் உண்மை முகம். பாரம்பர்யமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரும் டாக்டருக்குப் படித்தவருமான தமிழிசையிடமிருந்து இப்படியொரு விமர்சனத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' என்று முடித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்