'நடிகர் வடிவேலையும் விட்டுவைக்க மாட்டார்கள்' - பா.ஜ.க தலைவர்களை வசைபாடும் திருமாவளவன்

தமிழ்நாட்டில் யாரைப் பிடித்தாவது ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாஜக இருக்கிறது. நடிகர் வடிவேல் வந்தால்கூட அவரையும் விட்டுவைக்கமாட்டர்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்திக்க திருவனந்தபுரம் செல்லும் வழியில் நாகர்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ''கேரள மாநிலத்தில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தவேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன். 36 பேரை அர்ச்சகர்களாக நியமித்த அவருக்கு நன்றி தெரிவிக்க உள்ளேன். அரசியல் ரீதியாக மக்களிடம் பாஜக களத்தில் பதில் சொல்ல இயலாமல் தனிநபர் விமர்சனத்தில் தமிழக பாஜக தலைவர் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. தேர்தல் ஆணையம் மட்டுமல்ல உச்சநீதிமன்றம்கூட பாஜக ஆட்சியின் கைப்பாவையாக உள்ளது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

தமிழ்நாட்டில் யாரைப் பிடித்தாவது ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாஜக இருக்கிறது. நடிகர் வடிவேல் வந்தால்கூட அவரையும் விட்டுவைக்கமாட்டர்கள். தமிழக அமைச்சர் பகிரங்கமாக ஆளும் கட்சியான அதிமுகவை ரிமோட்கன்ட்ரோல் மூலம் பிரதமர் மோடி  இயக்குகிறார் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க அரசு சுதந்திரமாக இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது'' என்று கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் திரைபடத்துறையினர் இஷ்டம்போல பேசுவது அதிகரித்துள்ளது என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளும்கூட முதல்வர் இறந்தபிறகு வாய்க்குவந்தபடி பேசுகிறார்கள். பாஜகவின் மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்கா போன்றவர்கள் ஜிஎஸ்டி குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்த வேளையில் அவர்களுக்குத் தமிழக பாஜக தலைவர்கள் பதில் சொல்லாமல் மெர்சல் திரைப்படத்தில் வெளிவந்த கருத்துகளுக்கு பதில் சொல்ல இயலாமல் நடிகர் விஜய்மீது தனிநபர் விமர்சனம் செய்து வருகிறார்கள்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!