வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (23/10/2017)

கடைசி தொடர்பு:18:10 (23/10/2017)

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி!

விவசாய தேவைகளுக்காக வண்டல் மண் எடுக்க வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், விரக்தியடைந்த விவசாயி, இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட கூலித் தொழிலாளி இசக்கி முத்து என்பவர், ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் அச்சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விவசாயத் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்திருப்பது இப்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள மேற்கு தச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவரும் பழனிசாமி, விவசாயத் தேவைகளுக்காக காவுத்தம்பாளையம் கிராமத்தில் உள்ள, அரசு புறம்போக்கு குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வேண்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்திருக்கிறார்.

ஆனால், அரசு தரப்பில் இன்றுவரை எவ்வித அனுமதியும் வழங்காததால், விரக்தியடைந்த விவசாயி பழனிச்சாமி, தன்னை கருணைக் கொலை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்குமாறு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த விவசாயி பழனிச்சாமி, திடீரென தன் கையில் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், உடனே சுத்தரித்துக்கொண்டு, விவசாயி பழனிசாமியைத் தடுத்து நிறுத்தினர். இதனால் நடக்கவிருந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பழனிசாமி கூறும்போது, "ஓடைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க வேண்டி விவசாயி பழனிசாமி அனுமதி கேட்டதால்தான், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றார். பின்னர் காவல்துறையினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி பழனிசாமியை மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து வெளியேற்றினர். இச்சம்பவத்தால் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நீடித்தது.