தமிழிசையை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வி.சி.க வலியுறுத்தல்!

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததாகக் கூறி சேலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமார் 15 பேர் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே, "நாவடக்கு... நாவடக்கு... தமிழிசையே நாவடக்கு. திரும்பப் பெறு, திரும்பப் பெறு அவதூறைத் திரும்பப் பெறு..." என்று கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களை சேலம் காவல்துறையினர் கைது செய்தார்கள். 

இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டப் பொருளாளர் காஜா மொய்தீன், ''பா.ஜ.க., தலைவர் தமிழிசை செளந்தரராஜன் எங்க கட்சித் தலைவர் கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடியவர் என்று தரம் தாழ்ந்து விமர்சனம் செய்திருக்கிறார். இந்தியாவில் 12 லட்சம் பஞ்சமி நிலங்கள் இருக்கின்றன. தற்போது அந்த நிலங்கள் யார் வசம் இருக்கிறது என்று அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த நிலங்களை மீட்டெடுத்தால் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வீடு இல்லாமல் தெருவில் அலைய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இவர்கள் எங்களைப் பார்த்து கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என்று சொல்லுவதற்கு எந்தத் தகுதியும், தராதரமும் கிடையாது. பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷாவை குஜராத்திற்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றம் ஒரு காலத்தில் உத்தரவிட்டது. மேலும் சாதி, மதப் பெயரால் வன்முறை செய்யக்கூடிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இந்தியாவில் 3 ஆண்டுகள் தடை செய்திருந்தது. அந்தக் கட்சியின் வழிதோன்றியவர்கள் எங்களை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லாதவர்கள். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனை வன்கொடுமை சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கிறோம்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!