'எங்களுக்கு இலவச வீடு வழங்குங்கள்' - கலெக்டரிடம் உருகிய பார்வையற்ற தம்பதிகள்

தேசியப் பார்வையற்றோர் இணையத்தின் சார்பாக 10-க்கும் மேற்பட்ட பார்வையற்ற தம்பதியினர் சேலம் ஆட்சியர் ரோகிணியைச் சந்தித்து அம்மாவட்டத்தில் பார்வையற்ற தம்பதியினர்களுக்கு அரசு இலவசமாக 100 வீடுகள் கட்டிக் கொடுத்து கண்ணில்லாத எங்களுக்கு வழி காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.


இதுகுறித்து தெரிவித்த பார்வையற்ற தம்பதியினரான கனகா, ராமு, ''எங்க வீட்டுக்காரருக்கு 3 வயதில் கண்ணில் புரை விழுந்து கண் பார்வை இழந்தார். எனக்குப் பிறவியிலேயே கண் பார்வை கிடையாது. நாங்க இரண்டு பேரும் டிகிரி முடித்திருக்கிறோம். நாங்க இரண்டு பேரும் விரும்பி திருமணம் செய்து கொண்டோம். என் கணவர் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்க வீட்டில் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்கள்.


எங்க குடும்பம் ரொம்ப வறுமையான குடும்பம். அவர்கள் எங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. நானும் என் கணவரும் மேட்டூரில் 1000 ரூபாய் வாடகையில் சின்ன வீட்டில் குடியிருக்கிறோம். எங்களுக்கு 1 1/2 வயதில் ஶ்ரீலாவண்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தையை எங்க அம்மா பார்த்துக்கொள்ளுவாங்க. நான் வீட்டில் கூடை, சேர் பின்னுவேன். எங்க வீட்டுக்காரர் தெருத் தெருவாக ஊதுபத்தி விற்பார். எங்க இரண்டு பேர் உழைப்பில் கிடைக்கும் சொற்பப் பணத்தில், பாதி வீட்டு வாடகைக்கே கொடுக்கவேண்டியுள்ளது. மீதி வருமானத்தை வைத்து சாப்பாட்டிற்கே பத்தாமல் போகிறது. அதனால் கருணை கூர்ந்து அரசாங்கம் எங்களுக்கும் எங்களைப் போன்று கண் பார்வை இழந்த குடும்பங்களுக்கும் இலவச வீடு கட்டிக் கொடுத்து எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்'' என்றார். 

தேசியப் பார்வையற்றோர் இணையத்தின் தலைவர் முகமது தமீஸ், ''மதுரை, திருச்சி, சென்னை போன்ற மாநகராட்சிகளில் கண் பார்வையற்றோருக்கு அரசு இலவச வீடு கொடுத்திருக்கிறது. சேலத்தில் பார்வையற்றோர் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குக் குறைந்த பட்சம் இலவசமாக 100 வீடுகள் வழங்க வேண்டும். பேருந்துகளில் கண் பார்வையற்றவர்களுக்கு இருக்கைகளை ஒதுக்கித் தர வேண்டும். மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாகக் கொடுப்பதாக அரசு கூறியது. ஆனால் இன்று வரை உதவித்தொகை அதிகரித்து வழங்கப்படவில்லை. இந்தக் கோரிக்கைகளை அரசு கருணையோடு பரிசீலிக்கவேண்டும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!