'என்ன காய்ச்சல்னு சொல்லுங்கள்'- அலைக்கழிக்கப்பட்ட கல்லூரி மாணவி பலியான சோகம்! | Ariyalur College student died due to unknown fever

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (23/10/2017)

கடைசி தொடர்பு:18:40 (23/10/2017)

'என்ன காய்ச்சல்னு சொல்லுங்கள்'- அலைக்கழிக்கப்பட்ட கல்லூரி மாணவி பலியான சோகம்!

டெங்குவால் இறந்தார்கள் என்றால் ஆளும் கட்சியினருக்குக் கெட்டப்பெயர் வந்துவிடும் என்பதற்காக மருத்துவர்கள் என்ன காய்ச்சல் என்று சொல்லாமலேயே அரியலூரில் கல்லூரி மாணவி ஒருவர் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் சசிகலா. இவர் தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஒருவாரமாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். காய்ச்சல் குறையாத பட்சத்தில் கிழப்பழூவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்கள், "இது டெங்குக் காய்ச்சல் மாதிரி இருக்கிறது; இங்கு மருத்துவம் பார்க்க முடியாது. அரசு மருத்துவமனை செல்லுங்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களும் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனால் என்ன காய்ச்சல் என்று மருத்துவர்களிடம் கேட்டதற்கு பரிசோதனை செய்துவிட்டு சொல்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் எதுவும் சொல்லாமல் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கும் என்ன காய்ச்சல் என்று சொல்லாமல் சிகிச்சை அளித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி சசிகலா உயிரிழந்தார். குடும்பத்தில் முதல் பட்டதாரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வி பயின்று வந்த சசிகலா மர்மக்காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளிடம் என்ன நோய், உடம்பில் என்ன செய்கிறது என்று மருத்துவர்கள் சொல்ல மறுக்கிறார்கள். காரணம் டெங்குவால் இறந்தார்கள் என்று செய்தி வந்தால் ஆளும் கட்சியினருக்குக் கெட்டப் பெயர் வந்துவிடும் என்பதற்காக மருத்துவர்கள் நோயாளிகளிடம் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.