பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்க வாய்ப்பு? | Parole of Perarivalan to be extended to one month likely

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (23/10/2017)

கடைசி தொடர்பு:17:57 (23/10/2017)

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்க வாய்ப்பு?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், கடந்த 26 ஆண்டுகளில் பரோல் மூலம் ஒரு நாள்கூட வெளியே வரவில்லை. இந்நிலையில், இரண்டு மாதங்களாக அவர் பரோலில் உள்ளார். தந்தை மற்றும் சகோதரி உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அதைக் கணக்கில்கொண்டு அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட பரோல் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பாதியிலேயே நிறுத்தப்பட்டு, சென்ற வாரம் ஜோலார்பேட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், தன் கணவர் சிகிச்சை பெற, உடனிருந்து கவனிக்க, பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு அற்புதம்மாள் மனு அளித்திருந்தார்.

பேரறிவாளன்

இதற்காக, எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், பரோலை நீட்டிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதே கோரிக்கையை, பா.ம.க நிறுவனர்  ராமதாஸ், சி.பி.எம் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ-யின் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், வேல்முருகன், தனியரசு எம்.எல்.ஏ உள்ளிட்ட மேலும் பலர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே தமிழகத்தில் 8 மாதங்கள் வரை பரோல் நீட்டிப்பு வழங்கியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை முதல்வர் பரிசீலனையில் உள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலர் அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர். எனவே, நாளை பரோல் முடிவடையும் நிலையில், பேரறிவாளனின் தந்தையின் உடல்நிலை காரணமாக, அவருக்கு மேலும் பரோலை ஒரு மாதம் நீட்டிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.