வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (23/10/2017)

கடைசி தொடர்பு:19:35 (23/10/2017)

'நடிகர் விஜயை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்'.. சீறிய இளைஞர்கள்

mersal, மெர்சல்

‘மெர்சல்’ பட விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நாளொரு போராட்டமும், எதிர்எதிர் கருத்துகளும் பறந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகவும், கலைஞர்களை அச்சுறுத்தும் வகையிலும் பா.ஜ.க தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) சென்னை டேங்ஸ் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லியை பா.ஜ.க.,வினர் மிரட்டுவதாகக் கூறி தொடர் முழக்கங்களை எழுப்பினர். 

mersal, மெர்சல்

போராட்டத்தில் ஈடுபட்ட தாமோதரன் என்பவர் பேசியபோது, “பா.ஜ.க அரசு கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களும் தோல்வியடைந்த திட்டங்களே. மக்களுக்கு எதிராகச் செயலாற்றும் திட்டங்கள் அவை. ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றை காட்சிப்படுத்திய ‘மெர்சல்’ படத்தை தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்க்கிறார்கள். ஹிட்லரைக் கிண்டல் செய்து படம் எடுத்த சார்லி சாப்ளினுக்குக்கூட இவ்வளவு அச்சுறுத்தல்கள் இருந்ததா?, எனத் தெரியவில்லை. பா.ஜ.க.,வினர் ஹிட்லரைவிட மோசமாக நடந்துகொள்கிறார்கள். படத்திலுள்ள அந்தக் காட்சிகளை நீக்கச் சொல்வது சர்வாதிகாரத்தனமானது. ‘மெர்சல்’ படம் தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் அட்லி ஆகியோருக்கு மிரட்டல் விடுவதை பா.ஜ.க தலைவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு எட்டாத மருத்துவத்தையும், அதுதொடர்பான அரசியலையும் ‘மெர்சல்’ பேசியிருக்கிறது. மக்கள் பிரச்னையைப் பேசுவது தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான பண்பு. என்ன சாப்பிட வேண்டும்?, எதை உடுத்த வேண்டும்?, படம் எப்படி எடுக்க வேண்டும்?, என்பதை பா.ஜ.க சொல்லத் தேவையில்லை”, என்றார். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.