கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்திருக்கும் ஆர்ட்டிக் பிரதேசப் பறவைகள்..! | Lot of birds came to Kodiyakkarai Sanctuary from Artic

வெளியிடப்பட்ட நேரம்: 21:24 (23/10/2017)

கடைசி தொடர்பு:09:03 (24/10/2017)

கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்திருக்கும் ஆர்ட்டிக் பிரதேசப் பறவைகள்..!

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு ஆர்ட்டிக் பிரதேசத்திலிருந்து 18 ஆயிரம் கி.மீ. கடந்து கடல் ஆலா பறவைகள் வரத்தொடங்கியுள்ளன.  

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள பசுமைமாறாக் காடுகளில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. அதன் எதிர்புறம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் கோடைக்காலம் தொடங்கும் மார்ச் மாதம் வரை பல நாடுகளிலிருந்து பல வண்ணப் பறவைகள் இங்கு வந்து தங்கி, பிறகு தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.  

இந்த வகையில் சைபீரியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளிலிருந்து 4 அடி உயரமுள்ள அழகான பூநாரை (பிளம்பிங்கோ) பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகை தந்திருப்பது சரணாலயத்தின் தனிச்சிறப்பாகும். லடாக்கிலிருந்து சிவப்புகால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலைவாத்து. பர்மாவிலிருந்து சிறவி, இலங்கையிலிருந்து கடல் காகம் இவற்றுடன் இமயமலையிலிருந்து கொக்கு, இமாச்சலப்பிரதேசத்திலிருந்து இந்தியன் பிட்டா என 247 வகை பறவைகளும் ஆண்டுதோறும் இந்தச் சரணாலயத்துக்கு வந்து செல்கின்றன.  

இதில் மகுடம் சூட்டியதுபோல் ஆர்ட்டிக் பிரதேசத்திலிருந்து 18 ஆயிரம் கி.மீ. தூரம் எங்கும் நிற்காமல், ஓய்வெடுக்காமல் கோடியக்கரைக்குப் பறந்து வரும் ஆர்ட்டிக்டேன் என்னும் கடல் ஆலா பறவைகள் வருகை தந்திருக்கின்றன. ஆர்ட்டிக் பிரதேசத்தில் நிலவும் கடும் குளிரைப் போக்கவும், அதேநேரத்தில் அவற்றுக்குத் தேவையான இரை இங்கு கிடைப்பதாலும், லட்சக்கணக்கான பறவைகள் வருகின்றன. பறவைகளின் முதல் இனம் என்று அழைக்கப்படும் மூக்களிப்பான் என்ற பறவை இந்த ஆண்டு சரணாலயத்தில் காணப்படுவது சிறப்பானதாகும். இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் பேசுகையில், 'சுற்றுலாப் பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் பலநாட்டுப் பறவைகளைக் கண்டுகளிக்கலாம். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க