’கந்து வட்டியை ஒழிக்க நடவடிக்கை எடுங்கள்’ -நெல்லை ஆட்சியரிடம் அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தல்!

கந்து வட்டிக் கொடுமையின் காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவத்தின் எதிரொலியாகக் கந்து வட்டியை முற்றிலும் ஒழிக்குமாறு ஆட்சியரிடம் அனைத்துக் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது. 

கந்து வட்டி எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் கந்து வட்டிக் கொடுமை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தனர். இதில், சுப்புலட்சுமி, அவரது இரு குழந்தைகளான மதி சரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இசக்கிமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். 

இந்நிலையில், தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட், ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் தி.மு.க நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, நெல்லை மாவட்டத்தில் நிலவிவரும் கந்துவட்டிக் கொடுமை குறித்து ஆட்சியரிடம் விளக்கிக் கூறினர். 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கந்து வட்டிக் கொடுமை மீண்டும் தலைதூக்கி இருப்பதால், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மக்கள் அளிக்கும் மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கையெழுத்திட்ட மனுவையும் ஆட்சியரிடம் அளித்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதி அளித்தார். 

அனைத்துக் கட்சி நிர்வாகிகள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சபாநாயகரான ஆவுடையப்பன், ‘’கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தீக்குளித்துள்ளனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். இந்தப் பிரச்னைக்குக் காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அந்தக் குடும்பத்தினர் தீக்குளித்து இருக்கமாட்டார்கள். தமிழகம் முழுவதும் காவல்துறையும் அரசு நிர்வாகமும் செயலிழந்து கிடக்கிறது’’ என்று குற்றம் சாட்டினார். 

இதில், தி.மு.க மாவட்டச் செயலாளர்களான அப்துல்வகாப், சிவபத்மநாதன், சட்டமன்ற உறுப்பினர்களான டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், முகமதுஅபுபக்கா; இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன், மார்க்ஸிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினரான பழனி, ம.தி.மு.க மாநகரச் செயலாளர் நிஜாம், மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்பினர், இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!