’சித்ரவதை செய்யும் மாநகராட்சி மேஸ்திரிகள்’ ; ஆட்சியரிடம் கதறிய மலேரிய பணியாளர்கள்!

ஈரோடு மாநகராட்சியின் 1-வது மண்டல அதிகாரிகள் எங்களைச் சித்ரவதைச் செய்கிறார்கள். இந்த டெங்குக் காலத்தில்கூட வீட்டு வேலை செய்யச் சொல்கிறார்கள் என்று ஈரோடு கலெக்டர் அலுவலகப் படி ஏறி இருக்கிறார்கள், ஈரோடு மாநகராட்சி 1-வது மண்டல மலேரிய பணியாளர்கள்.

இதுப்பற்றி மலேரிய பணியாளர் வாசுதேவன், ''நாங்க ஈரோடு மாநகராட்சியில் 1-வது மண்டலமான வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம், சூரியம்பாளையம் பகுதிகளில் மலேரிய பணியாளர்களாக 65 பேர் வேலை பார்க்கிறோம். எங்களுக்கு மேஸ்திரிகளாக முனுசாமி, சுந்தரராஜன், ராஜேந்திரன், பிலவேந்திரன் என 4 பேர் இருக்கிறார்கள். இவர்கள் தான் எங்களைக் கண்காணித்து வேலை வாங்கக் கூடியவர்கள். இவர்கள் செய்யும் சித்ரவதை தாங்க முடியவில்லை.

நாங்கள் வேலைக்கு வராத நாள்களில் வந்ததைப்போல வருகைப் பதிவேட்டில் எழுதி பணத்தை எடுத்துக்கொள்வார்கள். மாதம் 3 நாள்களுக்கு மேல் விடுமுறை எடுத்தால் இரண்டாயிரம், மூன்றாயிரம் என எங்களிடம் மிரட்டிச் சம்பளம் தரும்போது வாங்கிக் கொள்கிறார்கள்.

நாங்கள் அனைவரும் தற்காலிகப் பணியாளர்களாக இருப்பதால், எங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றுவதாகச் சொல்லி ஒவ்வொருவரிடமும் முப்பதாயிரம், ஐம்பதாயிரம் என பணம் வாங்கி இருக்கிறார்கள்.

எங்களிடம் வாங்கியது மட்டுமல்லாமல் எங்க ஊரிலும் சிலரிடம் மாநகராட்சியில் துப்புரவுப் பணி வேலை வாங்கித் தருவதாக வகைத் தொகை இல்லாமல் பணம் வசூலித்திருக்கிறார்கள்.
இந்த டெங்குக் காய்ச்சல் காலத்திலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் வேலையை விட்டுட்டு போய் டாஸ்மாக் கடையில் சரக்கும், சைடிஸூம்  வாங்கிட்டு வா... என்று அனுப்புகிறார்கள்.

மளிகை லிஸ்ட் கொடுத்து இந்தப் பொருள்களை மளிகைக் கடையில் வாங்கிட்டுப் போய் வீட்டுல கொடுத்துட்டு வா... வீட்டுக்கு அருகில் உள்ள புல்களை பிடுங்கு, மரத்தை வெட்டு என்று வீட்டு வேலை வாங்குகிறார்கள். இப்படி மேஸ்திரிகள் செய்யும் அட்டூழியத்தைப் போய் மாநகராட்சி எஸ்.ஐ. சிவக்குமாரிடம் சொன்னதற்கு, 3 பேரை வேலையை விட்டு நீக்கிவிட்டார்'' என்றார்கள். 

இதுபற்றி மாநகராட்சி எஸ்.ஐ., சிவக்குமாரிடம் கேட்டதற்கு, ''ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையே இல்லாமல் ஜாலியாக இருந்தார்கள். தற்போது டெங்குக் காய்ச்சல், வைரல் காய்ச்சல் வந்ததால் 6 மாதமாக வேலை ஓவராக இருக்கிறது. அதனால் வேலைக்குப் பயந்துகொண்டு ஏதாவது புகார் கொண்டுவந்திருப்பார்கள். யாரையும் நீக்கவில்லை. மேஸ்திரிகளும் அவர்கள் சொல்வதைப் போல நடந்துகொள்ளவில்லை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!