வெளியிடப்பட்ட நேரம்: 23:50 (23/10/2017)

கடைசி தொடர்பு:08:08 (24/10/2017)

சேலம் உருக்காலை தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல்; மத்திய அரசு மீது குற்றச்சாட்டு!

சேலம் உருக்காலை தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து, தொழிலாளர்கள் சுமார் 300 பேர் சேலம் மத்திய தபால் தந்தி அலுவலகத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி சேலம் உருக்காலை பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், ''சேலம் உருக்காலை தனியார் மயம் ஆவதை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், தொழிலாளர் அமைப்புகள், அனைத்து சமுதாய அமைப்புகள் என பல தரப்பினரும் கடந்த 15 மாதமாக போராட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல கண்டன குரல்கள் எழுப்பியும், முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என மாநில அரசும் சேலம் உருக்காலையை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என்று கூறியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.,அரசு சிறிதளவும் கண்டுகொள்ளாமல் தனியாருக்கு தாரை வார்க்கும் அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது.

சேலம் உருக்காலையின் சொத்து மதிப்பீட்டாளர், சட்ட ஆலோசகர், பரிவர்த்தனை ஆலோசகர் ஆகிய பதவிகளுக்காக டெண்டர் விட்டு அதற்காக சில ஏஜெண்டுகளை நியமித்து இருக்கிறார்கள். இந்த ஏஜெண்டுகள் சேலம் உருக்காலையின் சொத்துகளை வாங்குவதற்காக உலகத்தில் உள்ள தனியார் முதலாளிகளிடம் பேசுவார்த்தை நடத்திவிட்டார்கள். அடுத்த மாதம் சர்வதேச டெண்டரை நடத்த இருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிக்கும் அரசு  நிறுவனம் சேலம் உருக்காலை. இந்த நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்க ஒருபோதும் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். இந்த இடத்தில் அரசு இரும்பாலை வர வேண்டும் என்பதற்காக 3003 பேர் நிலங்களை வெறும் ஆயிரத்துக்கும், ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கும் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகக் கூறிவிட்டு வெறும் 214 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தைத் தனியார் வாங்கினால் தொழிலாளர்கள் மட்டுமல்ல சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் பாதிப்புக்குள்ளாவார்கள். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் தனியார் தாரை வார்ப்பதை எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழக பாரதிய ஜனதா கட்சி மட்டும் மெளனமாக இருக்கிறது.
சேலம் உருக்காலை தனியாருக்குத் தாரை வார்த்தால் அது பா.ஜ.க., தமிழர்களுக்கு செய்யும் துரோகம். தற்போது தொழிலாளர்கள் மறியல் செய்து கைதாகி இருக்கிறோம். அடுத்த கட்டமாக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து குடும்பத்தோடு சாலை மறியல் செய்ய இருக்கிறோம்'' என்றார்.