கரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கிய அமைச்சர்!

திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் 434 பயனாளிகளுக்கு ரூ 2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் திருமாங்கல்யத்துக்கு தங்கம் மற்றும் நிதியுதவியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வழங்கினார்.


 

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று சமூக நலத்துறையின் சார்பில் ஏழை எளிய, படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தில் திருமாங்கல்யத்துக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 434 பயனாளிகளுக்கு ரூ 2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.பா.சுந்தரம், சமூக நல அலுவலர் வள்ளியம்மை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் காளியப்பன், செல்வராஜ், மார்கண்டேயன், ஜெயராஜ், பொரணி கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  "மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெண்களுக்கென்று அதிக அளவிலான சிறப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார்கள். அதன் அடிப்படையில் கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி அதை மீண்டும், ரூ 18 ஆயிரமாக அதிகப்படுத்தி வழங்கினார். பெண்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தை அறிவித்து 100 சதவிகிதம் நிறைவேற்றினார்கள். மேலும், வளர் இளம் பெண்களுக்கான இரும்புச் சத்து மாத்திரை வழங்கிவந்தார்கள்.

பெண் அரசு ஊழியர்களுக்கு 6 மாத காலம் வழங்கி வந்த மகப்பேறு விடுப்பை 9 மாதங்களாக உயர்த்தினார்கள். மேலும், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் திருமணத்துக்கு 4 கிராமாக வழங்கப்பட்ட திருமாங்கல்யத்துக்குத் தங்கம் தற்போது 8 கிராமாக உயர்த்தி வழங்கப்பட்டுவருகிறது. பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது. இந்த வகையில் பெண்களின் படிப்பறிவை அதிகப்படுத்துவதற்காக இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது இந்த அரசு. தொடர்ந்து இந்த அரசு பெண்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!