பட்டாசு வெடித்த சிறுவர்களைப் பதம் பார்த்த சாதி(தீ)! நடவடிக்கை எடுக்கக் கோரி மனு!

பொது இடத்தில் பட்டாசு வெடித்த சிறுவர்களை இளைஞர்கள் சிலர் சாதியைக் காரணம் காட்டி நையப்புடைத்ததாகவும், அதைத் தட்டிக் கேட்ட தங்களையும் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் மனு அளித்தனர்.

 

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு தனது கணவர், மாமியார், குழந்தைகளுடன் வந்த கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கம்மநல்லூரைச் சேர்ந்த லட்சுமி என்பவர்தான் மேற்படி புகார் மனுவை அளித்தார். அவரிடமே பேசியபோது, "நாங்க தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்க. எங்க ஊர்ல உள்ள மேல் சமூகத்துக்காரங்க எங்களை சாதிரீயாக ரொம்பக் கொடுமைப்படுத்துறாங்க. தீபாவளி அன்னைக்கு இரவு ஏழு மணி போல, என் மகன் விஜயும், அவனது நண்பன் நவீனும் எங்க ஊர்ல உள்ள ஆரம்பப் பள்ளிகூடத்துக்கு பக்கத்துல பட்டாசு வெடிச்சுருக்காங்க. அப்போ அங்கே வந்த உயர் சமூகத்தைச் சேர்ந்த பரத்வாஜ், மணிவண்ணன், குமரேசன், நவீண், சுபாஷ், முத்துக்குமார், நந்தகுமார்ன்னு ஏழு இளைஞர்கள், 'கீழ்ச்சாதிக்கார பயலுங்க, இங்க எப்படிடா பட்டாசு வெடிக்கலாம்?'ன்னு கெட்ட வார்த்தையால திட்டி இருக்காங்க.

அதுக்கு, விஜயும், நவீணும், 'நாங்க பொது இடத்துலதான் பட்டாசு வெடிக்கிறோம்'ன்னு சாதாரணமா சொல்லி இருக்காங்க. உடனே, ஏழு பேரும் சேர்ந்து என் மகனையும், நவீணையும் கல், கம்புகளாலும் ரத்தம் சொட்டச் சொட்ட அடிச்சுருக்காங்க. தட்டிக் கேட்கப் போன எங்களையும் அடிச்சுக் காயப்படுத்திட்டாங்க. உடனே, லாலாப்பேட்டை காவல்நிலையத்துல அந்த ஏழு பேர் மீதும் புகார் கொடுத்தோம். என் மகனிடம் வந்து போலீஸார் வாக்குமூலம் வாங்கிட்டுப் போனாங்க. எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கலை.

அந்த ஏழு பேரும், 'எங்க மேல கேஸ் கொடுத்துட்டா, எங்களை அரஸ்ட் பண்ணிடுவாங்களா? எங்களை ஒண்ணும் பண்ண முடியாது. போலீஸ் எல்லாரும் எங்க பக்கம். முடிஞ்சதைப் பாருங்க கீழ்ச்சாதி நாய்களா?'ன்னு எங்களை இளக்காரம் பண்றாங்க. குளித்தலை டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்தோம். அவரும் இதுவரை அந்த ஏழு பேர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கலை. அதனால்தான், மாவட்ட ஆட்சியராவது நடவடிக்கை எடுப்பார்ங்கிற நம்பிக்கையில குடும்பத்தோடு வந்து புகார் கொடுத்திருக்கிறோம்" என்றார் துக்கம் தொண்டையை அடைக்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!