பரபரப்பான 'மெர்சல்' சூழலில் கரூரில் இன்று பா.ஜ.க பொதுக்குழு!

'மெர்சல்' படம் வெளியானது முதல், அந்தப் படத்தில் மோடி அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக, அந்த படத்துக்கு எதிராக பா.ஜ.க-வினர் கோஷம்போடுகிறார்கள். இந்நிலையில்,அந்தக் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று (24.10.2017) கரூர் கொங்கு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.


 

ஏற்கெனவே, தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க ஆட்சியை இயக்கும் ரிமோட் கன்ட்ரோலே பா.ஜ.க தான் என்ற பேச்சு பரபரப்பாக அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தீபாவளியன்று விஜய் நடித்த 'மெர்சல்' படம் வெளியானது. அந்தப் படத்தில், ஜி.எஸ்.டி வரியையும், டிஜிட்டல் இந்தியா குறித்தும் வசனம் வருவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்கும்படியும் பா.ஜ கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். மெர்சல் படம் ஓடும் தியேட்டர்களையும் முற்றுகையிட்டுவருகிறார்கள். ஆனால்,  நடிகர்கள் கமல், விஷால் தொடங்கி பல்வேறு கட்சித் தலைவர்களும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துவருகிறார்கள்.

இப்படி, தமிழ்நாட்டில் பிரேக்கிங் நியூஸ்கள் விஜய், அதையும் தாண்டி பா.ஜ.க-வை சுற்றி உருவாகிக்கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில், இன்று கரூர் கொங்கு மண்டபத்தில், பா.ஜ. கட்சியின் மாநிலப் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டவர்கள் வந்துள்ளார்கள்.

இந்நிலையில்,'பொதுக்குழுவில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்படும்' என்று கரூர் மாவட்ட பா.ஜ.க புள்ளிகள் சிலரிடம் கேட்டோம். "இப்போதைக்கு மாநிலத் தலைமை மாற்றப்படாது. மாநிலத் தலைவராக தமிழிசை சௌந்தரராஜனே தொடர்வார் என்றே தெரிகிறது.  நடிகர் கமலின் கைப்பாவையாக இருந்து, நடிகர் விஜய் தனது படத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவுகளை விமர்சித்து, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அதனால், இனி பா.ஜ.க தலைவர்களின் செயல்பாடுகளும், அறிக்கைகளும், பேட்டிகளும் தி.மு.க மற்றும் நடிகர் கமல் உள்ளிட்டவர்களை கார்னர் செய்தே இருக்கும். அதற்கான ஆலோசனை நாளை நடக்கும்" என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!